இலங்கையில் சமூக ஊடகங்களை முற்றாகத் தடை செய்ய முடியும் : விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

1619

சமூக ஊடகங்கள்..

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் தமது நெறிமுறைகளை மீறும் வகையில் செயற்படும் போது சமூக ஊடகங்களின் பாவனையை நாட்டில் முற்றாகத் தடை செய்ய முடியும் என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

சமூகத்தில் தனிப்பட்ட உறவுகளை வளர்ப்பது போன்ற இலக்குகளின் அடிப்படையில் சமூக ஊடகங்கள் உருவாக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், சமூக ஊடகங்களை வன்முறைச் செயல்களை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஏனெனில் அது ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் அதன் கோட்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பேஸ்புக் போன்ற சமூக ஊடக அமைப்புகளால் இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தமது நிறுவனங்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தால், நாட்டில் சமூக ஊடகப் பாவனையை முற்றாக நிறுத்த முடியும் எனவும், சம்பந்தப்பட்ட சமூக ஊடக அமைப்புகள் மூலம் தொழில்நுட்ப அமைச்சுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் சமூக ஊடகங்களின் பாவனை தொடர்பில் Meta போன்ற நிறுவனங்கள் தொழில்நுட்ப அமைச்சுடன் கலந்துரையாடியுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.