உண்மைகளை உரைக்கும் ஊடகவியலாளர்கள் மீதான, தாக்குதலை கண்டிக்கின்றோம் : வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம்!!

591

Attack

இலங்கையின் வடபுலத்தில் பல்வேறான இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் அயராமல் உழைக்கும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் தாக்கப்பட்ட சிவஞானம் செல்வதீபன் மீதான தாக்குதலை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் இலங்கையில் இடம்பெற்று வரும் பல்வேறான, சமூகத்திற்கு மாற்றான செயற்பாடுகளை வெளியுலகிற்கு துணிவுடன் வெளிக்கொணர்ந்தும் அதற்கான தீர்வுகளை பெறுவதற்கு தளமாகவுமுள்ள ஊடகவியலாளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்டு வருவதனை ஏற்றுக் கொள்ளமுடியாது.

ஊடகவியலார்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது என்பது எட்டாக்கனியாகவே இருக்கின்றது. இந்த நிலையில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களின் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமை ஜனநாயகத்தின் மீதான ஐயப்பாடுடைய கேள்விக்கு வலுச்சேர்க்கின்றது.

சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று யாழ் வடமாரட்சியில் வைத்து தாக்கப்பட்ட எமது சக ஊடகவயலாளரான சிவஞானம் செல்வதீபன் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் உடன் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். அத்துடன் இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்கள் தமது தொழிலை தங்கு தடையின்றி மேற்கொள்ள கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனபதையும் வலியுறுத்த விரும்புகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.