காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மன ஆற்றுப்படுத்தல்!!

332

Kaanamal

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கவுன்ஸலிங் அதாவது மன ஆற்றுப்படுத்தல் வழங்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழு கூறுகின்றது.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வுகளின் போது காணாமல் போனவர்களின் குடும்பங்களின் உறவினர்கள் உள ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள் என்பது கண்டறிப்பட்டுள்ளதையடுத்தே இது தொடர்பிலும் தற்போது ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளரான எச்.டபிள்யூ.குணதாசா தெரிவிக்கின்றார்.

குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே சுகாதார அமைச்சு , மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு , சட்டம் மற்றும் ஓழுங்கு அமைச்சு என அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு வேலைத்திட்டம் தயாரிக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது.

செஞ்சிலுவைச் சங்கத்துடனும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டபோது அவர்களும் தேவையான உதவிகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களைப் பொறுத்தவரை சில குடும்பங்களில் 9 பேர், 10 பேர் என காணாமல் போய் உள்ளார்கள். ஒருவர் மட்டுமே எஞ்சியுள்ள குடும்பங்களும் உள்ளன, இந்த குடும்பங்களை பொறுத்தவரை அநேகமான குடும்பங்கள் மரண சான்றிதழோ அல்லது நஷ்ட ஈடு பெறுவதையோ விரும்பவில்லை. ஆணைக்குழு தேடி கண்டு பிடித்து தரும் என எதிர்பார்க்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த திட்டமானது காணாமல் போனவர்களின் குடும்பத்தினரை மரண சான்றிதழ் மற்றும் நஷ்ட ஈடு பெறுதலை தூண்டுவதற்கான முன்னெடுப்பாகவே தாம் கருதுவதாக உள்நாட்டு அமைப்பான காணாமல் போனோரை தேடி கண்டறியும் குழுவின் ஏற்பாட்டாளரான சுந்தரம் மகேந்திரன் சுட்டிக்காட்டுகின்றார்.

இதனை நிராகரித்துள்ள ஆணைக்குழுவின் செயலாளரான எச்.டபிள்யூ.குணதாசா மரணச் சான்றிதழ் அல்லது நஷ்ட ஈடு என்பது எவர் மீதும் திணிக்கக் முடியாது என்று குறிப்பிடுகின்றார்.

-BBC தமிழ்-