வவுனியாவில் திருடிய மோட்டர் சைக்கிளில் சென்று 5 இடங்களில் சங்கிலி அறுப்பு : ஹெரோயினுடன் சிக்கிய இளைஞர்கள்!!

1625


இரு இளைஞர்களை கைது..வவுனியாவில் திருடிய மோட்டர் சைக்கிளில் சென்று 5 இடங்களில் சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் அதிரடியாக செயற்பட்டு ஹெரோயினுடன் இரு இளைஞர்களை கைது செய்துள்ளதுடன் அறுக்கப்பட்ட சங்கிலிகளையும் மீட்டுள்ளனர்.

குறித்த இரு இளைஞர்களும் மகாறம்பைக்குளம் பகுதியில் வைத்து இன்று (12.05) கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் அண்மையில் மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்பின்னர் சில நாட்களில் திருநாவற்குளம், வைரவபுளியங்குளம், யாழ் வீதி, பூந்தோட்டம் சந்தி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் வீதியால் சென்ற மற்றும் தனிமையில் நின்ற பெண்களைப் பின் தொடர்ந்தும் அவர்களிடம் முகவரி விசாரிப்பது போன்று விசாரித்து அவர்கள் அணிந்திருந்த சங்கிலிகள் அறுத்துச் செல்லப்பட்டதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் தனித் தனி முறைப்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்குள் கிடைக்கப்பெற்றிருந்தது.

6 இடங்களில் இருந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.


இதன்போது மகறம்பைக்குளம் பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன்,

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மோட்டர் சைக்கிள் திருட்டு மற்றும் 5 இடங்களில் இடம்பெற்ற சங்கிலி அறுப்பு சம்பவங்கள் உள்ளிட்ட 6 திருட்டு சம்பவங்களுடன் தொடர்பு இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின், அறுக்கப்பட்ட 5 சங்கிலிகள், திருடப்பட்ட மோட்டர் சைக்கிள் என்பன மீட்கப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட இருவரும் பூந்தோட்டம் மற்றும் மதீனா நகர் பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களாவர். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.