
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 41 ஓட்டங்களால் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்சை பந்தாடியது.
இதில் கலிஸ்(72), மனிஷ் பாண்டே(64) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் கொல்கத்தா நிர்ணயித்த 164 ஒட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 122 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.
இதில் மும்பை இந்தியன்ஸ் சார்பில் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய லசித் மலிங்க கூறுகையில்..
முதல் 10 ஓவர்களில் நாங்கள் நன்றாக பந்து வீசி அவர்களை கட்டுப்படுத்தினோம். அதன் பிறகு ஆட்டத்தை அவர்கள் கையில் எடுத்து விட்டனர். கலிசும், பாண்டேவும் நீண்ட, வலுவான இணைப்பாட்டத்தை அமைக்க நாங்கள் அனுமதித்து விட்டோம்.
ஆட்டம் எங்களது பிடியில் இருந்து நழுவிப் போனதற்கு நானும் ஒரு காரணம். கலிஸ் 34 ஓட்டங்களில் ஆடிக் கொண்டிருந்த போது கொடுத்த பிடி வாய்ப்பை நான் வீணடித்து விட்டேன். இது பெரும் பின்னடைவாக அமைந்தது’ என்றார்.





