வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை பெற்றுக் கொள்ள முடியாது அவதிக்குள்ளாகிய அரச உத்தியோகத்தர்கள்!!

1396


அவதிக்குள்ளாகிய அரச உத்தியோகத்தர்கள்..வவுனியாவில் பெற்றோலைப் பெற்றுக் கொள்ள முடியாது அரச உத்தியோகத்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் பலரும் கடமைக்கு உரிய நேரத்தில் சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.கடந்த சில தினங்களாக பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனையடுத்து அத்தியாவசிய தேவைக்களை கருத்தில் கொண்டு அரச உத்தியோகத்தர்களுக்கான கடமைக்கான அழைப்பு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் வவுனியா, மாவட்ட செயலகம் அருகில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (20.05) காலை முதல் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.


கடமைக்கு சென்ற கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் என பல அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு செல்வதற்காக தமது மோட்டர் சைக்கில்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்தனர்.

இதன்போது அரச உத்தியோகர்தர்களுக்கு என ஒரு வரிசையும், ஏனையவர்களுக்கு மோட்டர் சைக்கிள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாகனங்கள் என இரு வரிசையும் சென்றன.


மதியத்திற்கு பின்னர் பொது மக்களுக்கான வரிசையில் நீண்ட நேரமாக வரிசையில் நின்றோருக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அவர்களுக்கு தனியான வரிசை வழங்க முடியாது என தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

இதனால் அரச உத்தியோகத்தர்கள் பலர் பொற்றோல் இன்றி அவர்களுக்கான வரிசையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அங்கு நின்றவர்களின் செயற்பட்டால் பெண் அரச உத்தியோகத்தர்கள் பலரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததுடன் திரும்பிச் சென்றிருந்தனர்.

எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு என ஒரு ஏற்பாட்டை செய்து தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன் அத்தியாவசிய தேவைக்கு என குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் வழங்கப்படுகின்ற போதும் அங்கு கடமைக்கு செல்லும் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் எரிபொருள் விநியோகம் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.