வவுனியாவில் எரிவாயு வாகனம் மக்களால் முற்றுகை!!

1675

எரிவாயு வாகனம்..

வவுனியா, குட்செட் வீதியில் எரிவாயு ஏற்றி வந்த வாகனம் ஒன்றினை முற்றுகையிட்ட மக்கள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (22.05) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட மக்கள் தமக்கு தேவையான எரிவாயுவை மதவாச்சி பூனாவ பகுதிக்கு சென்று அங்குள்ள பிரதான முகவரிடம் பெற்று வந்த நிலையில் சில சமயங்களில் கறுப்பு சந்தையிலும் அதிக விலைகொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் வவுனியாவில் குடும்ப அட்டை முறையில் எரிவாயு வழங்குவதற்கு பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் மாவட்ட செய்லகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவடுத்திருந்தனர்.

இதனூடாக அனைத்து மக்களுக்கு கிரமமாக மாதமொருமுறை எரிவாயு கிடைப்பதற்கான முறைமையும் குடும்ப அட்டை இல்லாது வவுனியாவில் வசிப்பவர்களுக்கு வேறு திட்டத்தினூடாக எரிவாயுவை வழங்குவதெனவும் இதன்போது தீர்மானித்திருந்தனர்.

இதன் பிரகாரம் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அறிவுறுத்தலுக்கு அமைய இன்று (22.05) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்படி வவுனியா நகரம், குட்செட் வீதி, குருமன்காடு, மன்னார் வீதி, வேப்பங்குளம், நெளுக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள 8 எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு எரிவாயுவை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வவுனியா குட்செட் வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்கு எரிவாயுவினை வழங்கிவிட்டு அப் பகுதியில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு வாகனத்தில் இருந்து 30 எரிவாயு கொள்கலன்கள் வழங்கப்பட்டன.

குறித்த பகுதியில் 100 இற்கும் மேற்பட்ட மக்கள் எரிவாயுவைப் பெறுவதற்காக வரிசையில் நின்றிருந்தனர். இதனையடுத்து தமக்கும் எரிவாயு வேண்டும் என தெரிவித்து எரிவாயு ஏற்றி வந்த வாகனத்தை வழிமறித்த மக்கள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் பொலிசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.

தமக்கும் எரிவாயுவை வழங்கிவிட்டு வாகனத்தை கொண்டு செல்லுமாறு அவர்கள் விடாப்பிடியாக நின்றதையடுத்து அப் பகுதியில் நின்ற 110 பேருக்கு எரிவாயு வழங்கப்பட்டதுடன், எஞ்சிய வர்த்தக நிலையங்களில் வழங்கப்பட்ட இருந்த எரிவாயுவையும் குறித்த அப்பகுதியில் வைத்து மக்களை வரவழைத்து வழங்கியிருந்தனர்.

அங்குள்ளவர்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டதை அடுத்து மக்கள் முரண்படுவதனை கைவிட்டு வரிசையில் நின்று எரிவாயுவை பெற்றிருந்தனர்.

எனினும் பிரதேச செயலகத்தினூடாக திட்டமிடப்பட்ட முறைமையினை இனிவரும் காலங்களில் பின்பற்றாமல் இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வழமைபோன்று பூனாவைணில் சென்றே எரிவாயுவை பெறவேண்டும் எனவும் குறித்த இடத்தில் பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.