வவுனியாவில் எரிவாயுக்காக வரிசையில் காத்திருந்து ஏமாற்றப்பட்ட 200க்கு மேற்பட்ட மக்கள்!!

1886

எரிவாயுக்காக..

வவுனியா பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 7 எரிவாயு விற்பனை முகவர்களுக்கு 400 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதன் அடிப்படையில் குட்சைட் வீதி ஜே.வி.ஆர் விற்பனையகத்தில் 120 எரிவாயு சிலிண்டர்கள், வேப்பங்குளம் மோகன் நிலையத்தில் 70 எரிவாயு சிலிண்டர்கள், வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கம் 30 எரிவாயு சிலிண்டர்கள் , நெளுக்குளம் குமார் விற்பனையகத்தில் 70 எரிவாயு சிலிண்டர்கள்,

குருமன்காடு சுகந்தன் மற்றும் சரவனா ஆகிய விற்பனையகங்களில் 80 எரிவாயு சிலிண்டர்கள் , பட்டானிச்சூர் ஸ்டார் காட்வெயார் 30 எரிவாயு சிலிண்டர்கள் என 400 எரிவாயு சிலிண்டர்களை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் பிரதேச செயலகத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

கிராம சேவையாளரின் உறுதிப்படுத்தலுடன் காலை 5.30 மணி தொடக்கம் மக்கள் பதிவுகளை மேற்கொண்டு காத்திருந்தனர். எனினும் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க விற்பனையகத்தில் மக்களுக்கு 30 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் சமயத்தில் அவ்விடத்தில் முற்றுகையிட்ட மக்களினால் அவ்விடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன் எரிவாயு ஏற்றி வந்த வாகனத்தை வழிமறித்த மக்கள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர். தமக்கும் எரிவாயுவை வழங்கிவிட்டு வாகனத்தை கொண்டு செல்லுமாறு அவர்கள் விடாப்பிடியாக நின்றதையடுத்து அப் பகுதியில் நின்ற நபர்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டது.

இதன் காரணமாக தெரிவு செய்யப்பட்ட விற்பனை முகவர்களின் நிலையங்கள் முன்பாக காலை 5.30 மணி தொடக்கம் தங்களின் பதிவுகளை மேற்கொண்டிந்து வரிசையில் காத்திருந்த 200க்கு மேற்பட்டவர்கள் 10 மணிநேரத்தின் பின்னர் எரிவாயு இன்றி ஏமாற்றத்துடன் வீடு திரும்பியிருந்தனர்.

தினசரி 400 எரிவாயு சிலிண்டர்கள் கிராம சேவையாளரின் சிபாரிசுடன் வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் வாகனத்தினை மறித்து காலை தொடக்கம் பதிவுகளை மேற்கொண்டு காத்திருந்த மக்களை ஏமாற்றும் வகையில் ஓர் சில மக்கள் செயற்பட்டமையினாலும் குறித்த நடவடிக்கை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இனி ஒரு மாதங்களின் பின்னரே மாவட்டத்திற்கு எரிவாயு பெற்றுக்கொள்ள வேண்டிய நிலமை உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் எரிவாயு நிறுவனத்தினர் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு எரிவாயு வழங்க மறுப்பு தெரிவித்துள்ளமையினால் பூனாவ பகுதியில் அமைந்துள்ள எரிவாயு களஞ்சியசாலைக்கு சென்றே எரிவாயுவினை பெற வேண்டிய நிர்ப்பந்த நிலமையும் மக்களுக்கு உருவாகியுள்ளது.