வவுனியா வடக்கு சின்னடம்பனில் மாணவர் திறன் வகுப்பறை திறப்பு விழா!!

790


சின்னடம்பனில்..வவுனியா வடக்கு சின்னடம்பனில் சுமார் 150 மாணவர்களுடன் தரம் 1 தொடக்கம் உயர்தரம் வரையிலான வகுப்புக்களுடன் இயங்கும் வ.சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் சி.ஜெயபாலசிங்கம் தலைமையில் மாணவர் திறன்வகுப்பறை திறப்புவிழா சிறப்புற நடைபெற்றது.இந்த விழாவில் ஒய்வு நிலை அதிபர் செ.செந்தில்நாதன் பிரதம விருந்தினராகவும் கௌரவ விருந்தினர்களாக து.ரவிச்சந்திரன் (பாடசாலை வசதிப்படுத்துனர்), அங்கணி தனபாலசிங்கம் ( கிராம அலுவலர் சின்னடம்பன் ), எஸ்.தணிகாசலம் ( ஓய்வு நிலை கிராம அலுவலர்) ஆகியோரும், அயற்பாடசாலை அதிபர்கள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள், மாணவர்கள் என சுமார் 200 பேர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிபர் தனது தலைமையுரையில் பாடசாலையின் ஆளணி, பௌதீக வளம், பாடசாலைச் சுட்டிகள் என்பவற்றை எடுத்துக்காட்டி மாணவர்கள் கிடைக்கப்பெற்ற நவீன கற்றல் – கற்பித்தல் உபகரணத் தொகுதிகளைப் பயன்படுத்தி கல்வி நிலையை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமாறு கேட்டுக்கொண்டார்.


தொடர்ந்து நன்கொடையாளர் கலாநிதி சந்திரசேகரம் பரமலிங்கம் காணொளியூடாக ஆற்றிய உரையில் இப்பாடசாலை பிரதேசத்திற்கு ஆற்ற வேண்டிய பங்கு பற்றியும், கிராம சிறார்களின் கல்வியிலே முன்னேற்றத்தை கொண்டு வருவதன் ஊடாக சமூகம், கிராமம், பிரதேசம், மாவட்டம், நாடு என்பவற்றை முன்னேற்ற முடியும் என்றும் இது தான் இன்றைய நிலையில் தேவை எனவும் குறிப்பிட்டார்.

பிரதம விருந்தினர் தனது உரையில் இப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் வசதிகள் எதுவும் இல்லாத நிலையிலும் கல்வியில் உயர்ந்த நிலையில் உலகத்தில் தலைசிறந்த நாடுகளில் உயர் பதவிகளில் இருப்பதை சுட்டிக்காட்டி,


இப்பிரதேசத்தில் பிறந்து நகரத்தில் வசிப்பவர்கள் தங்களது பிறந்த இடத்தின் பெயரை சொல்ல வெட்கப்படும் காலத்தில் உலக அரங்கில் தங்களது பிறந்த கிராமத்தின் பெயரை உரக்கக்கூவி அந்த கிராமங்களை முன்னேற்ற துடிக்கும் கல்வியிலாளர்களை உதாரணம் காட்டி இவர்களின் சாதனைகளை விஞ்சிய சாதனைகளை ஒவ்வொரு மாணவர்களும் நிகழ்த்திக்காட்டி வாழ்க்கையில் அன்பால் நிறைந்த, பிறருக்கு உதவிசெய்து இன்புறும் நற்பிரஜைகளாக திகழ வேண்டும் எனவும் அதற்காக கடினமாக முயற்சி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

மிகச் சிறந்த முறையில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு தனது நோக்கத்தை நிறைவேற்றும் என்பதில் ஐயமில்லை.