கர்ப்பிணிகள் உட்பட மூன்று சகோதரிகள் குழந்தைகளுடன் தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

472


இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் கணவர்களின் கொடுமை தாங்க முடியாமல், கர்ப்பிணிகள் உட்பட 3 சகோதரிகள் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சகோதரிகள் கலு மீனா(25), மம்தா(23), கம்லேஷ்(20). இவர்கள் மூவரும் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களை திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் ஆன நாள் முதல் இவர்களது மாமியார் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சகோதரிகள் மூவரும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் காணாமல் போயுள்ளனர்.



அவர்கள் நான்கு நாட்களுக்கு பிறகு, நேற்றைய தினம் டுடு கிராமத்தில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த சகோரிகளில் இருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளனர். மேலும் அவர்களுடன் இரண்டு குழந்தைகளும் இறந்துள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



அதனைத் தொடர்ந்து, குறித்த பெண்களின் கணவர்கள் மற்றும் மாமியார் மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதற்கிடையில், சகோதரிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, அவர்களில் இளையவரான கம்லேஷ் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

அதில், ‘நாங்கள் இப்போது செல்கிறோம், மகிழ்ச்சியாக இருங்கள். எங்கள் மரணத்திற்கு காரணம் எங்கள் மாமியார். தினமும் இறப்பதை விட ஒருமுறை சாவதே மேல்.


அதனால் ஒன்றாக இறப்பது என்று முடிவு செய்தோம். அடுத்த பிறவியில் மூவரும் ஒன்றாக இருப்போம் என நம்புகிறோம். நாங்கள் சாக விரும்பவில்லை, ஆனால் மாமியார் எங்களை துன்புறுத்துகிறார்கள். எங்கள் இறப்புக்கு எங்கள் பெற்றோரைக் குறை கூறாதீர்கள்’ என பதிவிட்டிருந்தார்.

தற்கொலை செய்துகொண்டவர்களின் உறவினர் ஹேம்ராஜ் மீனா கூறுகையில், ‘எனது சகோதரிகள் வரதட்சணைக்காக அடிக்கடி அடித்து துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் மே 25ஆம் திகதி காணாமல் போனபோது, அவர்களை கண்டுபிடிக்க தூணில் இருந்து மின்கம்பம் வரை ஓடினோம்.

உள்ளூர் காவல் நிலையத்திலும், மகளிர் ஹெல்ப்லைனிலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் நாங்கள் எஃப்ஐஆர்களைப் பதிவு செய்தோம், ஆனால் மிகக் குறைந்த உதவியையே பெற்றோம்’ என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ராஜஸ்தானில் உள்ள பெண் ஆர்வலர்கள் இந்த வழக்கை உயர்மட்ட விசாரணைக்கு எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததற்கு ராஜஸ்தான் வெட்கித் தலை குனிய வேண்டும் எனவும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர்கள், பெண்களின் உடல்களை மீட்க 4 நாட்கள் எடுத்துக் கொண்ட பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.