வவுனியா வேப்பங்குளம் எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மை : பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வரவழைப்பு!!

1907

எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மை..

வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையத்தில் இன்று (19.06.2022) மதியம் பொதுமக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மையினையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.

குறித்த எரிபொருள் நிலையத்திற்கு 6600 லீட்டர் பெற்றோல் தாங்கிய பவுசர் ஒன்று வருகைதரவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கடந்த மூன்று நாட்களாக எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்களுடன் மக்கள் காத்திருந்தனர்.

எனினும் இதுவரை எரிபொருள் தாங்கிய பவுசர் வரவில்லை என்பதுடன் குறித்த எரிபொருள் நிலையத்தில் புதிதாக மோட்டார் சைக்கில் வரிசை உருவாக்கப்பட்டதாக தெரிவித்து அவ்விடத்தில் நின்ற பொதுமக்களிடையே குழப்பநிலமை ஏற்பட்டது.

எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட அமைதியின்மைனையடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டதுடன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் இராணுவ அதிகாரி அவ்விடத்தில் நின்ற பொதுமக்களிடமும் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் குறித்த எரிபொருள் நிலையத்திற்கு எப்போது பெற்றோல் தாங்கிய பவுசர் வரும் என்ற தகவல் தெரியவில்லை எனவே மக்களுக்கு டொக்கன் வழங்கப்படும் என வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் இராணுவ அதிகாரி தெரிவித்தமையினையடுத்து அவ்விடத்தில் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டு பொதுமக்கள் சிலர் வீதியிலும் இறங்கினர்.

அதனை பாதுகாப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையுடன் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கி டொக்கன் முறையினை நடைமுறைப்படுத்தி நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.