முப்பது வருடங்களின் பின்பு அவுஸ்திரேலியா தொடரை வென்ற இலங்கை : சொந்த மண்ணில் சாதனை!!

884

சொந்த மண்ணில் சாதனை..

சுமார் முப்பது வருடங்களின் பின்பு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை சொந்த மண்ணில் வென்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கொழும்பு ஆர். பிரேமதாஸ மைாதானத்தில் இன்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதற்கமைய, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 110 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சில் குஹேனெமன், பெட் கம்மின்ஸ் மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெகட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இதையடுத்து, 259 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பாக டேவிட் வோனர் 99 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார். அதற்கமைய, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 3 இற்கு 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளதோடு, ஒரு போட்டி மீதமிருக்கத் தொடரையும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.