காதலனுடன் நடக்கவிருந்த திருமணம், வேறு நபருடன் சென்ற பெண் : உறவினரை மணந்த புதுமாப்பிள்ளை தற்கொலை!!

472


தமிழகத்தில்..தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலி வேறு நபருடன் சென்றதால், உறவுக்கார பெண்ணை திருமணம் செய்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த நடுவனந்தல் புதூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி குமரேசன். இவர் பெண்ணொருவரை ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க, திருமண நிச்சயம் செய்யப்பட்டது. சூன் 23ஆம் திகதி இவர்களின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணப்பெண் திடீரென வேறொரு நபருடன் சென்றுவிட்டார்.


திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் இவ்வாறு செய்தது, குமரேசன் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர், குமரேசனுக்கும் அவரது உறவுக்கார பெண்ணொருவருக்கும் ஏற்கனவே குறிக்கப்பட்ட திகதியில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் மன வருத்தத்தில் இருந்த குமரேசன், திருமணம் முடிந்த மூன்றே நாட்களில் விபரீத முடிவை எடுத்தார். வயலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர், மரத்தில் தூக்கிட்டு சடலமாக தொங்கியுள்ளார்.


இதனைக் கண்ட அவரது பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த பொலிசார் குமரேசனின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குமரேசன் தற்கொலைக்கு முன் பதிவு செய்த வீடியோவையும் பொலிசார் கைப்பற்றினர்.

அதில், ‘நான் தற்கொலை செய்து கொண்டது குறித்து யாரும் வருத்தப்பட வேண்டாம். என்னை அவள் ஏமாற்றிவிட்டு சென்றது சரிதானா? என்னை கோழை என நினைக்க வேண்டாம்.

தற்கொலை முடிவுக்காக என்னை மன்னித்து விடுங்கள்’ என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். புதுமாப்பிள்ளை திருமணமான மூன்றே நாட்களில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.