பட்டினியில் அழும் பிள்ளைகள் : வீதியில் அழுது புலம்பிய தந்தைக்கு உதவிய மக்கள்!!

1061

பட்டினியில்..

உணவு மற்றும் பால் இன்றி தனது பிள்ளைகள் பசியில் அழுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை எனக் கூறி 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வீதியில் பதாகையை வைத்துக்கொண்டு அழுது புலம்பியுள்ளார்.

இந்த சம்பவம் ஹெம்மாத்தகம நகரில் நடந்துள்ளது. நகரில் பிரதான வீதியில் நபர் ஒருவர் அழுதுக்கொண்டிருப்பதை பார்த்த பொலிஸார், வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் அவருக்கு உணவு உள்ளிட்ட தேவையான பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளனர்.

ஹெம்மாத்தகம சியம்பலாவ என்ற பிரதேசத்தில் வசித்து வரும் பீ.எம்.சுசந்த குமார என்ற இந்த நபர், கட்டிட நிர்மாண தொழிலாளி எனவும் அவருக்கு 7 மற்றும் 13 வயதான ஆண் பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சீமெந்து விலைகள் அதிகரித்துள்ளதால், தனது தொழில் நின்று போயுள்ளதாக சுசந்த குமார தெரிவித்துள்ளார்.

7 வயதான மகன் பால் கேட்டு அழுகிறான். பிள்ளைகளுக்கு பால் மட்டுமல்ல குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மூன்றுவேளை சாப்பிடவும் எதுவுமில்லை. தொழில் இல்லாத என்னால், பிள்ளைகளுக்கு உணவை பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

என்னை போல் பல பெற்றோர் செய்வதறியாத பரிதாப நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் படும் கஷ்டத்தை விபரிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

நகரின் பிரதான வீதியில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால், வீதியின் நடுவில் அமர்ந்து அழுது கொண்டிருந்த இந்த நபருக்கு விபத்து ஏதேனும் ஏற்படும் என்று பொலிஸார் தலையிட்டு அவரை வீதியோரத்தில் அமருமாறு கூறியுள்ளனர்.

அவரது கஷ்டத்தை உணர்ந்த பொலிஸார் மாத்திரமல்லது மக்களும் இன மத பேதமின்றி இந்த இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு தேவையான உணவுப்பொருட்கள், பானங்கள், மரக்கறிகள் மற்றும் தேவையான பணத்தையும் வழங்கியுள்ளனர்.

உதவிகளை பெற்றுக்கொண்ட அவர், அனைவருக்கும் நன்றி கூறியதுடன் ஹெம்மாத்தகம நகரில் தனக்கு உதவிய இந்த மக்கள் மனிதநேயத்தை அறிந்தவர்கள் எனக்கூறியுள்ளார்.