வவுனியா செட்டிகுளம் பேரூந்தில் சனநெரிசல் ஏற்பட்டதால் பேரூந்தை நிறுத்து விட்டு இறங்கிச் சென்ற சாரதி!!

2713

செட்டிகுளம் பேரூந்தில்..

வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் ஊடாக செட்டிகுளம் சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்தில் அதிக சனநெரிசல் ஏற்பட்டு பேரூந்தில் பலர் தொங்கிக் கொண்டு பயணித்தமையால் பேரூந்தை இடைநடுவே நிறுத்து விட்டு சாரதி இறங்கிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை 6.00 மணியளவில் வவுனியாவில் இருந்து புறப்பட்ட பேரூந்து மாலை 6.40 மணியளவில் பட்டானிச்சூர் பகுதியை அடைந்த போதே சாரதி வாகனத்தை செலுத்த முடியாது எனத் தெரிவித்து பேரூந்தில் இருந்து இறங்கிச் சென்றதுடன், அது குறித்து இ.போ.சபை முகாமையாளருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.

வவுனியாவில் இருந்து பூவசரன்குளம் ஊடாக பயணித்த இன்றைய இறுதிப் பேரூந்தில் வவுனியா நகரில் கற்றல் செயற்பாடுகளுக்கு வந்தோர், வேலைக்கு வந்தோர், தேவை கருதி வந்தோர் என பலரும் செட்டிகுளம் திரும்பிச் செல்ல பேரூந்துக்கு காத்திருந்தனர்.

வவுனியா பேரூந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இ.போ.சபை பேரூந்து இலுப்பையடியை அடைந்த போது பேரூந்துக்குள் நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து பேரூந்து மன்னார் வீதி, குருமன்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பேரூந்து தரிப்பிடங்களில் நிறுத்தி பயணிக்களை ஏற்றிய போது பேரூந்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதுடன், இளைஞர்கள் பலரும் இடம் இன்மையால் பேரூந்தின் பின்புறத்திலும் வாயில் பகுதியிலும் தொங்கியபடி பயணித்தனர்.

தொடர்ந்து சென்ற பேரூந்து பட்டானிச்சூர் பகுதியை அடைந்த போது அங்கும் மக்கள் நின்றமையால் ஏற்ற முடியாது எனத் தெரிவித்தும், பேரூந்தில் பாதுகாப்பற்ற வகையில் பயணிகளை கொண்டு செல்ல முடியாது எனத் தெரிவித்தும் பேரூந்தில் இருந்து இறங்கி சென்றிருந்தார். இது குறித்து சாலை முகாமையாளருக்கும் அவர் தெரியப்படுத்தியிருந்தார்.

இதனால் பேரூந்தில் பயணித்த பலரும் வீடு செல்ல முடியாது இரவு வேளையில் சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிசார் இணைந்து இது குறித்து சாலை முகாமையாளருக்கு தெரியபர்படுத்தியதையடுத்து,

இ.போ.சபையின் வவுனியா சாலையில் இருந்து பிறிதொரு பேரூந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் இரண்டு இ.போ.சபை பேரூந்துகளிலும் மக்கள் ஏறி புறப்பட்டுச் சென்றிருந்தனர்.