வவுனியா செட்டிகுளத்தில் புகையிரத்தினை மறித்து மக்கள் போராட்டம் : திரும்பிச் சென்ற புகையிரதம்!!

2602

செட்டிகுளத்தில்..

வவுனியா செட்டிகுளம் பகுதியில் புகையிரத்தினை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் புகையிரதம் திரும்பி மதவாச்சி நோக்கி சென்றது.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த (04.07.2022) அன்று அனுராதபுரத்திலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதம் வவுனியா செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பற்ற புகையிரத கடவையூடாக மோட்டார் சைக்கிலில் பயணித்த காந்திநகர் பகுதியை சேர்ந்த ருக்சன் (33 வயது) புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்களாகி சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவை அமைக்கப்பட்டு உத்தியோகத்தர் ஒருவர் கடமையில் ஈடுபடுத்துமாறு கோரி செட்டிக்குளம் நகரில் இன்று (07.07.2022) மதியம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் போராட்டகாரர்கள் பேரணியாக விபத்து இடம்பெற்ற பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் சென்று புகையிரத பாதையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அச் சமயத்தில் அனுராதபுரத்திலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரத்தினை வழிமறித்த போராட்டகாரர்கள் தமக்கு உரிய தீர்வினை வழங்கினால் தாம் புகையிரத செல்வதற்கு வழிவிடுவதாக தெரிவித்து புகையிரத்தின் முன்பாக அமந்திருந்தனர்.

அவ்விடத்திற்கு செட்டிக்குளம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வருகை தந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய போதிலும் அவர்கள் அதற்கு தீர்வு கிடைக்கும் வரை தாம் புகையிரதம் செல்வதற்கு வழிவிடுவதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

சுமார் 3 மணிநேரமாக அவ்விடத்தில் புகையிரதம் நின்றதுடன் பின்னர் பின்நோக்கிய வண்ணமே மதவாச்சி புகையிரத நிலையம் நோக்கி புகையிரதம் பயணித்ததுடன் போராட்டக்காரர்கள் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றிருந்தனர்.