அறிமுக டெஸ்டிலேயே 12 விக்கெட்டுகள் : அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை இமாலய வெற்றி!!

709


இலங்கை இமாலய வெற்றி..காலியில் நடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. சண்டிமலின் இரட்டை சதத்தின் உதவியுடன் இலங்கை அணி 554 ஓட்டங்கள் குவித்தது.
அதனைத் தொடர்ந்து 190 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் பந்துவீச்சில் அச்சுறுத்திய அறிமுக வீரர் பிரபாத் ஜெயசூர்யா, இரண்டாவது இன்னிங்சிலும் அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை அள்ளினார்.


அந்த அணியின் கவாஜா (29), லபுஸ்சாக்னே (32), ஸ்மித் (0) ஆகிய முன்னணி வீரர்களும், கிரீன் (23), ஸ்டார்க் (0) ஆகியோரும் பிரபாத் ஜெயசூர்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

அவுஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 16 ஓட்டங்கள் எடுத்து தீக்ஷனா பந்துவீச்சில் வெளியேறினார்.


கடைசி விக்கெட்டான ஸ்வெப்சனையும் தனது பந்துவீச்சில் பிரபாத் ஆட்டமிழக்க செய்ய, அவுஸ்திரேலிய அணி 151 ஓட்டங்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இதன்மூலம், முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடைந்ததற்கு இலங்கை அணி பழி தீர்த்துக் கொண்டது. பிரபாத் ஜெயசூர்யா தனது அறிமுக டெஸ்டில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.