விபத்தில் இருவர் பலி..
புரட்டொப் பகுதியில் இருந்து புஸ்ஸலாவை நோக்கி பயணித்த பேருந்து இன்று(11) காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது சம்பவ இடத்திலேயே இருவர் மரணமடைந்துள்ளதுடன், சிலர் காயமடைந்துள்ளனர்.
புஸ்ஸலாவ, பெரட்டாசி தோட்டத்திலிருந்து, புஸ்ஸலாவை நகரத்துக்கு பயணிகளை ஏற்றிவந்த பேருந்து, வீடன் பகுதியில் வைத்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மிதி பலகையில் பயணித்த இருவர், பேருந்து மண்திட்டில் சாய்ந்ததால், அதில் சிக்குண்டு பலியாகியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் பெரட்டாசி தோட்டத்தில் வசிக்கும் சுரேன்ஜித் புஷ்பகுமார் (39 வயது) மற்றும் ஹெல்போட 7ம் கட்டை தோட்டத்தில் வசிக்கும் விஜயகுமார் கவிஷ்கர் (20 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிகளவான பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்ததாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பலர் மிதி பலகையிலும் தொங்கிக்கொண்டு பயணித்துள்ளனர்.
குறித்த பேருந்தில் 70 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிறு காயங்களுக்குள்ளானவர்கள் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் பேருந்தை எரித்துள்ளனர். இதேவேளை இந்த வீதியில் பயணிகள் போக்குவரத்தில் இரண்டு பேருந்துகளே சேவையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புரட்டொப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.