13 வயதுச் சிறுமி..
தாயும் தந்தையும் வெளிநாடு சென்றதால், தனது 9 வயது தங்கையை கவனித்து கொள்ள தன்னால் முடியவில்லை எனக் கூறி, 13 வயதான சிறுமி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ள சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சிறுமிகளில் வீட்டை தேடிச் சென்று இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் காலி மாவட்டத்தின் கோணாபினுவெல என்ற இடத்தில் நடந்துள்ளது.
சிறுமிகள் கோணாபினுவெல லஸ்சனகம அம்பகஹா சந்திப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த சிறுமிகளின் தாய் நான்கு வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளார்.
மீன்பிடி தொழில் செய்து வந்த தந்தை சிறுமிகளை தனியாக விட்டு, விட்டு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளதாக கோணாபீனுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல கஷ்டங்களுக்கு மத்தியில் லாழ்ந்து வந்துள்ள இந்த சிறுமிகளில் மூத்த சிறுமி தனக்கு தனது தங்கையை பராமரிக்க முடியவில்லை கூறி, தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக எழுதிய கடிதத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சிறுமிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவர்களை பெருத்தமான காப்பகத்திடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வாழ்வாதார பிரச்சினைகள் காரணமாக பலர் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அத்துடன் பணத்தை சம்பாதிப்பதற்காக பலர் வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், அவர்களை நம்பி வாழ்ந்த பிள்ளைகள், முதியோர் உட்பட பலர் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.