விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து 5 மணிநேரம் பயணித்த சிறுவன்!!

311

Boy Boy2

அமெரிக்காவில் விமானத்தின் சக்கரத்தில் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்து கொண்டு ஐந்து மணித்தியாலங்கள் பயணித்த 16 வயதுடைய மாணவன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா விமான நிலையத்திலிருந்து ஹவாய் தீவுக்குச் சென்ற விமானத்தில் பயணித்த சிறுவனே இவ்வாறு உயிர்தப்பியுள்ளார்.

இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ள பகுதியில் அமர்ந்தவாறு ஜோன் ஜோஸ் என்ற 16 வயதுச் சிறுவன் ஒருவன் திருட்டுத் தனமாக பயணம் செய்துள்ளான்.

ஹவாயின் மோயி விமான நிலையத்தில் எந்தவிதமான அடையாள ஆவணங்களும் இன்றி இந்தச் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய புலனாய்வு துறை (FBI) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர் ஸ்திரமான நிலையில் இருப்பதாக தெரிகிறது.

தமது வீட்டில் இருந்து தப்பியோடிய மாணவன் கலிபோர்னியாவின் சன் ஜோசே விமான நிலைய வேலியின் ஊடாக நுழைந்து விமானத்தின் சில்லுப் பகுதியில் ஏறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விமானம் 12,000 அடி உயரத்தில் பயணித்த சமயம், போதிய உயிர்வாயு இல்லாமலும் கடும் குளிரிலும் இந்த மாணவன் கடும் சிரமப்பட்டிருக்கக்கூடுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து ஜோன் ஜோஸ்சிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.