வவுனியாவில் அத்தியாவசிய தேவைகளின் பெயரில் கலனில் எரிபொருள் விநியோகம்!!

2894

கலனில் எரிபொருள் விநியோகம்..

வவுனியாவில் அத்தியாவசிய தேவைகளின் பெயரில் கலனில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதால் 5 நாட்களாக வீதியில் எரிபொருளுக்காக காத்திருந்த பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டியிருந்ததாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்று (12.07) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 5 நகாட்களுக்கு பின்னர் நேற்று காலை பெற்றோல் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.

இதன்போது பெற்றோல் எரிபொருளை பெறுவதற்காக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள் என்பன நீண்ட வரிசையில் காத்திருந்தன.

எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அத்தியாவசிய தேவைக்கு என்னும் பெயரில் அரசாங்க அதிபரின் சிபாரிசுக் கடிதத்துடன் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்று கலன்களில் எரிபொருளை பெற்றுச் சென்றிருந்தது. இதேபோன்று, வேறு பலருக்கும் கொள்கலன்களில் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றிருந்தது.

கலன்களில் எரிபொருள் விநியோகம் இடையிடையே இடம்பெற்றதுடன், தனியார் நிதி நிறுவனங்களின் கார்கள் உட்பட பல கார்கள் முறையான வரிசையின்றி செல்வாக்கு அடிப்படையில் எரிபொருளை பெற்றிருந்தன.

இதன்காரணமாக, கடந்த 5 நாட்களாக பெற்றோல் பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த முச்சக்கர வண்டியை வாழ்வாதாரமாக கொண்ட முச்சக்சக்கர வண்டிகள் உட்பட பலரும் எரிபொருளை பெற முடியாது வீடு திரும்பியிருந்ததுடன், மீண்டும் 6 வது நாளாக பெற்றோல் வரும் என்ற நம்பிக்கையுடன் வீதியில் காத்திருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினரின் அனுமதியுடன் காப்புறுதி நிறுவனத்தினர் பெற்றோல் எரிபொருள் கோரிக்கையை முன்வைத்தனர். இதன்போது அவசர விபத்து சேவை காப்புறுதிப் பிரிவின் மாவட்டத்திற்கான ஒரு வாகனத்திற்கு பெற்றோல் வழங்க அனுமதி வழங்கியிருந்தேன்.

வேறு எந்த வாகனத்திற்கோ அல்லது கலன்களில் பெற்றோல் நிரப்புவதற்கோ குறித்த தனியார் நிதி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கவில்லை. அத்துடன், கலன்களில் பெற்றோல் எடுப்பதற்கு நாம் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.