விழுப்புரத்தில்..
விழுப்புரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரே மாதத்தில் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அன்னியூரை சேர்ந்தவர் விஜய குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீபா எனும் இளம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து விஜய குமாரின் காதலுக்கு பிரதீபா சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இருவரது வீட்டினருமே இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 13 ஆம் தேதி பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி விஜய குமார் மற்றும் பிரதீபா திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், நேற்று நண்பர்களுடன் இந்த தம்பதி சுற்றுலா சென்றிருக்கிறார்கள். அப்போது, திருவாமாத்தூர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட சென்றிருக்கிறார்கள்.
பிரதீபா அங்கே ஒயிட் பாஸ்தா சாப்பிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து வீடு திரும்பிய தம்பதி உறங்கச் சென்றிருக்கிறார்கள்.ஆனால், நள்ளிரவு நேரத்தில் பிரதீபா வாந்தி எடுக்கவே கலக்கமடைந்த விஜய குமார் அவரை அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
ப்ரதீபாவிற்கு ஏற்கனவே இருதய பிரச்சனைகள் இருந்ததாகவும் அதற்காக அவர் மாத்திரை உட்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதீபாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதனால் அவரது கணவர் விஜய குமார் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்.
இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த கஞ்சனூர் காவல்நிலைய அதிகாரிகள் பிரதீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.