தமிழ்நாட்டில்..
ஒருவரைப் போலவே இந்த உலகில் ஏழு பேர் இருப்பதாக ஒரு கூற்று உண்டு. ஆனால், அது உண்மையா பொய்யா என்பதை விட அந்த ஏழு பேரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது மிகவும் அரிதான விஷயம் தான்.
அதே வேளையில், ஒத்த உருவம் கொண்ட இரட்டையர்களை நாம் பொது இடங்களில் அல்லது, நமக்கு தெரிந்த நண்பர்கள் அல்லது உறவினர்கள் குடும்பங்களில் ஒரு முறையாவது நிச்சயம் பார்த்திருப்போம்.
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில், சுமார் 30 க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் ஒரே பகுதியில் இருப்பது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அமைந்துள்ளது அங்காடிமங்கலம் என்னும் கிராமம். மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய இரண்டு மாவட்ட எல்லைகளில் இருக்கும் இந்த கிராமத்தை பலரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
30-க்கும் மேற்பட்ட இரட்டையர்கள்
இதற்கு காரணம், அங்குள்ள பெரும்பாலான குடும்பங்களில், ஏராளமான இரட்டையர்கள் இருப்பது தான். இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் இந்த பகுதியில், சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவற்றுள் 30க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் இருப்பதாக அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரே ஊரில் இத்தனை இரட்டையர்கள் இருப்பதால், இது தொடர்பாக பலரும் இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இரட்டையர்கள் ஒத்த உருவத்துடன் இருப்பதால், அவர்கள் மாறி மாறி, ஒரே பள்ளி அல்லது கல்லூரிக்கு சென்றால், அங்குள்ள யாராலும் இவர்களை அடையாளம் காண முடியாது. சினிமாவில், இரட்டையர்கள் கதாபாத்திரங்களுக்கு மத்தியில், என்னென்ன குழப்பங்கள் நடக்குமோ, அதே போன்று மிகவும் வேடிக்கையான குழப்பங்கள், இப்பகுதியில் உள்ள இரட்டையர்கள் மத்தியிலும் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஊரோட அடையாளம்
இவை அனைத்தையும் விட, ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இன்னும் அந்த கிராமத்தில் இரட்டையர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளது தான். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் அல்லது புகழ் இருக்கும்.
அதே போல, அங்காடிமங்கலம் கிராமத்திற்கும் இரட்டையர்கள் அதிகமாக இருப்பது ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. பலரும், இந்த அதிசய கிராமத்தினை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.