கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரியில் பூட்டிய வீட்டில் தாய் மகன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன். இவர் கிராமிய நாடகத்தில் கலைஞராக இருந்து வருகிறார்.
இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். இந்த நிலையில் செந்தாமரை கண்ணன் இரண்டாவது மனைவி கமலா மற்றும் மூன்றாவது மனைவி சத்யா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.
கடந்த சில நாட்களாகவே கமலா மற்றும் சத்யா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை கமலா(50)மற்றும் அவரது மகன் குரு (17) ஆகிய இருவரும் காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு வெளியே பூட்டப்பட்ட நிலையில் இருவரும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.
கமலா மற்றும் குரு ஆகிய இருவரும் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை வெளியே பூட்டி விட்டு வீட்டின் உள்ளே ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செந்தாமரை கண்ணனின் இரண்டாவது மனைவி கமாலவுக்கும்,மூன்றறாவது மனைவி சத்யாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.இதனால் மூன்றாவது மனைவி சத்யாவின் வீட்டிற்க்கு கடந்த சில நாட்களாக செந்தாமரை கண்ணன் செல்லாமல் கமலாவின் வீட்டிலேயே இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த நிலையில் இருந்த மூன்றாவது மனைவி சத்யா கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் சத்யாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊத்தங்கரை அருகே பூட்டிய வீட்டில் தாய் மகன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.