குழப்பநிலை..
வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரசாங்கத்தின் வாகன இலக்க நடைமுறையை அமுல்படுத்த முயன்ற போது ஏற்பட்ட குழப்ப நிலையை பொலிசார் கட்டுப்படுத்தியிருந்தனர்.
வவுனியா பண்டார வன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரசாங்க அறிவுறுத்தலுக்கு அமைய வாகனத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் இன்றைய தினம் (22.07) எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக 3 தினங்களாக வரிசையில் நின்றோர் தமக்கு தான் எரிபொருள் வழங்க வேண்டும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனாலும் அரசாங்க அறிவுறுத்தலையே தம்மால் நடைமுறைப்படுத்த முடியும் என இரு பகுதியினரும் தெரிவித்தமையால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிசார் ஒலிபெருக்கி மூலம் 6,7.8,9 ஆகிய இலக்கங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என அறிவித்தல் வழங்கியதுடன்,
அங்கு நின்ற ஏனைய இலக்க மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள் என்பவற்றை அங்கிருந்து அகற்றி குழப்ப நிலையை கட்டுப்படுத்தியிருந்தனர். இதன்பின் சீராக எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.