நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை : அமைச்சரின் புதிய அறிவிப்பு!!

780

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை..

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை புதுப்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாளைய தினம்(26.07) முதல் லங்கா ஐஓசி மற்றும் சிபெட்கோ ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு முறைமை நடைமுறைக்கு வரும் என அவர் அறிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் இந்த செயன்முறை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிபெட்கோ மற்றும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்களையும் உடனடியாக இந்த முறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் அமைச்சர் கூறினார்.

ஒகஸ்ட் 1ஆம் தேதிக்குள் QR வசதிகள் கொண்ட எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகம் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும். தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டில் பதிவுசெய்து இந்த முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம் எனவும் அமைச்சர் கூறினார். பயனர்கள் தங்கள் வணிகப் பதிவோடு பல வாகனங்களைப் பதிவு செய்வதற்கான விருப்பங்கள் வார இறுதிக்குள் வழங்கப்படும்.

பொலிஸ் திணைக்களம் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படும், ஒவ்வொரு முச்சக்கர வாகனமும் ஒரு குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்திற்கு என ஒதுக்கப்படும்.

டிப்போக்கள் அல்லது எரிபொருள் நிலையங்களுக்கு ஒதுக்கப்படும் பேருந்துகளை பதிவு செய்ய போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, கைத்தொழில் மற்றும் சேவை வழங்கும் துறைகள் போன்ற பிற சேவைகள், எரிபொருள் நிலையங்களில் தங்களின் தேவைகள் மற்றும் வாகனங்களின் ஒதுக்கீடு ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படும்.

ஒகஸ்ட் 1 முதல் QR குறியீட்டு முறைமை மாத்திரமே நடைமுறையில் இருக்கும். வாகன இலக்கத்தகட்டின் இலக்கங்கள் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படாது எனவும் அமைச்சர் கூறினார்.