பள்ளி மாணவி தற்கொலை : அடுத்தடுத்து நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்!!

1821

விருத்தாசலத்தில் ..

விருத்தாசலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட ஆயியார் மடம் தெருவில் வசிக்கும் கோபி என்பவரது 17 வயது மகள் விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று வீட்டிற்கு வந்த மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினருக்கு தெரிவிக்காமல் இறுதி சடங்கை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சரியாகப் படிக்கமுடியவில்லை என்பதாலும் அதனால் பெற்றோர் சரிவர தன்னிடம் பேசாமல் இருப்பதாலும்மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதாக கடிதத்தில் மாணவி எழுதி வைத்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், மாணவி மரணத்தில் சந்தேகம் உள்ள நிலையில் போலீசார் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் கள்ளக்குறிச்சியிலும், திருவள்ளூரிலும் தற்போது விருதாச்சலத்திலும் அடுத்தடுத்து பள்ளி மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் மிகுந்த சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.