ஊசி போட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்த பெண் : என்ன நடந்தது?

1608

புதுச்சேரியில்..

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே ஊசி போட்ட சிறிது நேரத்தில் திடீரென்று மயங்கி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான தேவநாதன் என்பவரது மனைவி கவிதா. இவருக்கு வயது 45. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு கவிதாவிற்கு, புல் நறுக்கும் இயந்திரத்தில் புல் நறுக்கிக்கொண்டு இருக்கும் போது, எதிர்பாராதவிதமாக கை மடக்கி, எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது வலது கை மணிக்கட்டு அருகில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்து எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒரு வருடம் கழித்து தான் கையில் பொருத்தப்பட்டிருக்கும் பிளேட்டை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனவே இந்தாண்டு மார்ச் மாதம் ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 22-ந் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கையில் இருந்த பிளேட் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 24-ந் தேதி கவிதான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கையில் அதிகமாக வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜிப்மர் மருத்துவமனை மருந்து விற்பனையகத்தில் வலிக்காக மருத்துவர் எழுதிக் கொடுத்த ஊசி மற்றும் மருந்துகளை வாங்கி வந்து, தனியார் கிளினிக்கில் காண்பித்து, அங்கு ஊசி போட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் ஊசி போட்ட சிறிது நேரத்தில் கவிதா அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறுவுறுத்தியுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே கவிதா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் கவிதாவுக்கு போட்டுக்கொண்ட மருந்து, அறுவை சிகிச்சைக்கு முன் செலுத்தவேண்டியது எனவும் இது வலிக்கான ஊசி அல்ல எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து வழக்குபதிவு செய்த தவளக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறான ஊசி போட்டதன் காரணமாக பெண் இறந்தாரா? தனியார் கிளின்க் மருத்துவர் பரிசோதிக்காமல் எப்படி ஊசி போட்டார்..? ஜிப்மர் மருத்துவமனையில் இந்த மருந்தை எதற்காக கொடுத்தனர்..? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது.