கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் போர்டில் சாகச பயணம் : இலக்கை அடையும் தருணத்தில் நேர்ந்த துயரம்!!

1473

திருவனந்தபுரத்தில்..

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சாகச பயணம் மேற்கொண்டவர் அந்த இலக்கை அடையும் தருணத்தில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு புல்லம்பாறை பகுதியை சேர்ந்தவர் அனஸ் ஹஜாஸ் (வயது 31). ஹாலிவுட் படங்களில் வரும் ஹீரோக்கள் ஸ்கேட்டிங் போர்டில் செல்வதை போல சிறுவயது முதல் எப்போதும் ஸ்கேட்டிங் போர்டிலே எங்கும் சுற்றிவந்துள்ளார்.

மேலும் பல ஸ்கேட்டிங் போர்டு போட்டிகளிலும் இவர் வெற்றியை பதிவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து இவருக்கு ன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் போர்டில் சென்று சாதனை படைக்க முடிவு செய்துள்ளார்.

இவரின் இந்த முடிவை பெற்றோர்கள், நண்பர்கள் ஆகியோரும் ஊக்கப்படுத்தியுள்ளனர். இது வரை இது போன்ற சாதனையை யாரும் செய்யாததால் இந்த அவர் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார்.

அதன்படி கடந்த மே மாதம் 29ம் தேதி உறவினர்கள், நண்பர்கள் சூழ கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு ஸ்கேட்டிங் போர்டு பயணத்தை தொடங்கியுள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா, போன்ற மாநிலங்களை ஸ்கேட்டிங் போர்டு மூலம் கடந்து சில நாட்களுக்கு முன்னர் ஹரியானாவை அடைந்துள்ளார்.

பின்னர் அங்குள்ள அம்பலா என்ற இடத்தில் இருந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “64வது நாளான இன்று ஹரியானா மாநிலத்தை அடைந்துள்ளேன். இன்னும் 10 அல்லது 15 நாட்களில் காஷ்மீரை அடைந்து விடுவேன். அனைவரும் எனக்காக பிரார்த்திக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், அங்கு இருந்து மீண்டும் தனது பயணத்தை தொடங்கியவர் ஹரியானா மாநிலம் பஞ்சகுலா அருகே சென்றபோது லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

இந்த தகவல் அவரது பெற்றோர், மற்றும் உறவினர்களுக்கு தெரியவர அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாகச பயணம் மேற்கொண்டவர் அந்த இலக்கை அடையும் தருணத்தில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.