எடுத்த சபதத்தை நிறைவேற்றிய மும்பை இந்தியன்ஸ் வீரர் : 9 வருஷத்துக்கு அப்பறம் அம்மாவை சந்தித்த மகன்!!

1642

மும்பை இந்தியன்ஸ்..

மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேயா 9 வருடங்கள் கழித்து தனது குடும்பத்தினரை சந்தித்திருக்கிறார். உலக அளவில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துள்ளது தொடர் ஐபிஎல். இதன் மூலம் பல திறமைவாய்ந்த இளைஞர்கள் உலக அளவில் பிரபலமாகியிருக்கிறார்கள்.

ஹர்திக் பாண்டியா, பும்ரா என இந்த பட்டியல் நீள்கிறது. இந்நிலையில் இந்த பட்டியலில் இணைந்துள்ளார் குமார் கார்த்திகேயா. சிரமமான சூழ்நிலையில் இருந்து தனது கனவுகளை மட்டுமே மூலதனமாக கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் நுழைந்திருக்கிறார் அவர். இதனிடையே அவர் 9 வருடம் மற்றும் 3 மாதங்கள் கழித்து மீண்டும் தனது குடும்பத்தினரை சந்தித்திருக்கிறார். இந்த பிரிவுக்கு காரணமாக அமைந்தது அவர் எடுத்த சபதம் தான்.

மும்பை அணியில் தேர்வாகிய கார்த்திகேயா, 15 வது ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல, ரஞ்சி போட்டியில் மத்திய பிரதேச அணி முதல்முறை கோப்பையை வென்றதிலும் இவருடைய பங்கு அதிகம் இருந்தது.

15 வயது முதல் கிரிக்கெட் விளையாடிவரும், கார்த்திகேயாவின் தந்தை போலீஸ் கான்ஸ்டபிள் ஆவார். குடும்ப சூழ்நிலை காரணமாக கிரிக்கெட் விளையாட அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால் வீட்டில் இருந்து வெளியேறிய அவர், வாழ்வில் ஏதாவது சாதித்த பிறகே வீட்டுக்கு திரும்புவதாக சபதம் எடுத்திருக்கிறார். அதன்பிறகு, அவரது திறமையை கண்ட பயிற்சியாளர் பரத்வாஜ் அவருக்கு உதவி செய்திருக்கிறார்.

அவர் மூலமாகவே மத்திய பிரதேச அணிக்காக விளையாடும் வாய்ப்பு கார்த்திகேயாவுக்கு கிடைத்திருக்கிறது. 2 ஆண்டுகளில் 50 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். அதன் காரணமாக அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் மீண்டும் தனது குடும்பத்தினரை தற்போது சந்தித்துள்ளார் கார்த்திகேயா. இதுபற்றி அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” என்னுடைய குடும்பத்தினரையும் அம்மாவையும் 9 ஆண்டுகள் 3 மாதங்கள் கழித்து சந்தித்திருக்கிறேன்.

என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், 9 வருடங்கள் கழித்து தனது அம்மாவை சந்தித்ததாக கார்த்திகேயா தெரிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.