
எனது மகன் விடுதலைக்கு இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி திடீரென உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்..
எனது மகன் விடுதலைக்காக எனது போராட்டம் மீண்டும் தொடரும். இனி அதிக பலத்தோடு போராட்டம் நடத்துவேன். முதலமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். ஊடகங்களின் ஒத்துழைப்பு எனக்கு தேவை. எனது மகனை முதலமைச்சர் காப்பாற்றுவார்.
எனது மகன் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
தீர்ப்பு தள்ளிப் போனதற்கு அரசியல் குறுக்கீடுதான் காரணமோ என்று நினைக்கிறேன்.
நீதி எங்கள் பக்கம் உள்ளது. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எத்தனை காலத்திற்குதான் இந்த வழக்கை சொல்லி அரசியல் பண்ணுவார்கள். ஒரு பரோல் கூட இல்லாமல் 23 வருடங்களாக சிறைக் கொடுமையை அனுபவிக்கிறார்கள்.
எனது மகனுக்கும், ராஜீவ் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று எனது மகனிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியே சொல்லிவிட்டது எங்கள் பலத்தை கூட்டி விட்டது.
எவ்வளவுதான் அரசியல் குறுக்கீடுகள் இருந்தாலும் என் மகனை சட்டப்படி மீட்பேன் என்று அற்புதம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்தார்.




