3 குழந்தைகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய் : கணவன் மீதான ஆத்திரத்தில் நடந்த கொடூரம்!!

1464

திருவண்ணாமலையில்..

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சதாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன். கட்டிட மேஸ்திரியான இவருக்கும், அமுதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு நிலவரசு, குறளரசு என்ற இரண்டு ஆண் குழந்தைகளும், 7 மாத கைக் குழுந்தையும் இருந்துள்ளது. இந்நிலையில் அமுதா தன் குழந்தைகள் மூன்று பேரையும் ஆற்றில் தூக்கி வீசிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தாய் அமுதாவும் தற்கொலைக்கு முயன்றபோது, அவ்வழியாக சென்றவர்கள் அமுதாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

குழந்தைகளின் உடல்களை கண்டு உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. இந்த தற்கொலை முயற்சி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அமுதாவுக்கும் அவரது கணவர் பரசுராமனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்ததாக தெரியவந்தது.

அதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேப்பூர்செக்கடி பகுதியில் உள்ள அமுதாவின் உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்ற பரசுராமன் அங்கேயே தங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடும் மனஉளைச்சலில் இருந்த அமுதா, பள்ளியில் இருந்த மூத்த மகன் நிலவரசுவை பாதியிலேயே வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர், வீட்டில் இருந்த மற்ற 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு தென்பெண்ணை ஆற்றுக்கு சென்று மூன்று குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும், குடும்ப பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்ற சம்பவம் உறிவினர்கள் மட்டுமின்றி கிராம மக்களை மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.