இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

1522

சேலம்..

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே பாலப்பட்டியில் குறை பிரசவத்தில் பிறந்த இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகளோடு விவசாய கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே எருமப்பட்டி ஊராட்சி, பாலப்பட்டி சேர்ந்தவர் சபரீஷ் (30). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சரளா (28) என்கின்ற பெண்ணுடன் பத்தாண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 7 வயதில் சர்வேஷ் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் சரளாவிற்கு சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு குறை பிரசவத்தில் வளர்ச்சி குறைவாக இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தாய் சரளா குழந்தைகளின் நிலை குறித்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மருத்துவர்களிடம் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இருந்தபோதிலும் தனக்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்தது குறித்து மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார். தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்ற சாரளா தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த நிலையில் இன்று அதிகாலை சரளாவின் தாய் எழுந்து பார்த்தபோது தனது மகள் மற்றும் குழந்தைகள் காணாதது குறித்து தனது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனால் அதிர்ந்து போன சரளாவின் குடும்பத்தார் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை, அதன் பிறகு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் பார்த்தபோது சரளா தண்ணீரில் மிதந்தவாறு இருந்ததை கண்ட அவரது சகோதரர்கள் உடனடியாக கிணற்றில் இருந்து மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலமாக கொண்டு சென்று சேர்த்தனர்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 50 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் போடப்பட்ட இரட்டை பச்சிளம் குழந்தைகளை நவீன தொழில்நுட்ப (வாட்டர் புரூப் கேமரா உதவியுடன் எடப்பாடி தீயணைப்பு துறையினர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.