பொய்ப் புகார்… சினேகன்மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன் : நடிகை ஜெயலட்சுமி ஆதங்கம்!!

1321

சென்னையில்..

சென்னை, விருகம்பாக்கம், வெங்கடேஷ்நகர் மெயின்ரோடு ஸ்ரீ கோகுலம் அப்பார்ட்மென்ட்டில் கவிஞரும், மக்கள் நீதி மய்யத்தின் இளைஞரணிச் செயலாளருமான சினேகன், `சினேகம் ஃபவுண்டேஷன்’ நடத்திவருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அதில், “நான் மேற்கண்ட முகவரியில் வசித்துவருகிறேன். சினேகம் ஃபவுண்டேஷன் பெயரில் பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளையை, கடந்த 23.12.2022-ம் தேதி முதல் நடத்திவருகிறேன். அறக்கட்டளையை வருமான வரித்துறை அங்கீகரித்து அதற்கு 12-AA சான்றிதழும் வரிவிலக்கும் வழங்கியிருக்கிறது. மேலும், `சினேகம் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் பான் கார்டும் இருக்கிறது.

நான் என்னுடைய சினேகம் ஃபவுண்டேஷன் மூலம் தமிழ்நாடு முழுவதும் பல சேவைத் திட்டங்களை சிறப்பாகச் சட்டத்துக்கு உட்பட்டு எந்தவிதப் புகாருமின்றி தற்போதுவரை செய்துவருகிறேன்.

சமீபகாலமாக என்னுடைய அறக்கட்டளையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தும் சின்னத்திரை நட்சத்திரமும், வழக்கறிஞருமான ஜெயலட்சுமி என்பவர், தவறான விலாசம் கொடுத்து இணையதளத்தில் தான்தான் சினேகம் அறக்கட்டளையின் நிறுவனர் என்றும், அந்தப் பெயரில் பொதுமக்களுக்கு நற்பணி செய்வதாகவும் அதற்கு இணையதளம் மூலம் எனக்குச் சொந்தமான சினேகம் ஃபவுண்டேஷன் பெயரைப் பயன்படுத்தி நிதி வசூலித்தாக எனக்குப் பல புகார்கள் வந்தன.

பொதுமக்களிடம் நிதி வசூலித்து பொதுச் சேவை செய்தால் அதற்கான உரிய கணக்குகளை நாம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் நான் பொதுமக்களிடம் பொதுவெளித் தளங்கள் மூலம் இதுவரை எந்த நிதியும் திரட்டவில்லை.

மேற்கூறிய ஜெயலட்சுமி, சினேகம் ஃபவுண்டேஷன் பெயரைப் பயன்படுத்தி நிதி வசூலித்ததாக வருமான வரித்துறையினர் என்னுடைய கவனத்துக்குக் கொண்டுவந்தனர். நானும் பொதுத் தளங்களில் ஜெயலட்சுமி செய்துவரும் மோசடிகளைப் பார்வையிட்டபோது, அவர் என்னுடைய அறக்கட்டளையின் பெயரில் இணையதளத்தில் தவறான விலாசம் மற்றும் விவரங்களைக் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றிவருகிறார் என்பது தெரியவந்தது.

நான் இது தொடர்பாக என்னுடைய அறக்கட்டளையின் பெயரை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினால், அது தவறான விலாசம் என்று தபால்துறை திருப்பி அனுப்பிவிட்டது. நான் நேரடியாக என்னுடைய மேலாளரை அனுப்பி விசாரித்தபோது அந்த சினேகம் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விலாசம் போலியானதென்பது தெரியவந்தது.

போலியான விலாசத்தில் என்னுடைய அறக்கட்டளையை இயக்குவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து தொலைபேசி மூலம் பொதுமக்களைத் தனியாகச் சந்தித்து, அவர்களைத் தன் வலையில் வீழ்த்திப் பணம் பறிக்கும் ஜெயலட்சுமிமீது மோசடி வழக்கு பதிவுசெய்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும், சினேகம் ஃபவுண்டேஷன் பெயரை தவறாகப் பயன்படுத்தியதற்காக ஜெயலட்சுமிமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியும்… அந்த போலியான இணையதளத்தை முடக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் கவிஞர் சினேகன்மீது நடவடிக்கை எடுக்கும்படி இன்று நடிகை ஜெயலட்சுமி, கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார். பின்னர் அவரிடம் பேசினோம். “என்மீது கவிஞர் சினேகன் அவதூறாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறார். நான் கடந்த 2018-ம் ஆண்டு முதல் சினேகம் அறக்கட்டளையைத் தொடங்கி மக்களுக்கு உணவு உட்பட பல்வேறு சேவைகளைச் செய்துவருகிறேன்.

கொரோனா பேரிடர் காலகட்டத்தில் மக்களுக்கு எங்களின் சினேகம் அறக்கட்டளை மூலம் முடிந்த உதவிகளைச் செய்திருக்கிறோம். ஆனால், கவிஞர் சினேகன் தன்னுடைய சினேகம் அறக்கட்டளையின் பெயரை நான் தவறாகப் பயன்படுத்தி, பொதுமக்களைத் தனியாகச் சந்தித்துப் பணம் பறித்ததாகப் புகார் அளித்திருக்கிறார். அது முற்றிலும் தவறனாது.

என்னுடைய பெயரை களங்கப்படுத்தும் வகையிலும், நான் பெண் என்றுகூட பாராமல் என்னை அவமானப்படுத்தும் வகையிலும் கவிஞர் சினேகன் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறார். மேலும், நான் பா.ஜ.க-வில் மாநில மகளிரணி துணைத் தலைவியாக இருந்துவருகிறேன். அதேபோல கவிஞர் சினேகனும் ஒரு கட்சியில் இருந்துவருகிறார். அரசியல் ஆதாயத்துக்காகக்கூட அவர் என்மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கலாம் என நான் கருதுகிறேன்.

ஏனெனில் தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ந்துவருவது மற்ற கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பா.ஜ.க நிர்வாகிகள்மீது இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். என்னுடைய அறக்கட்டளை, அண்ணாநகரில்தான் செயல்பட்டுவருகிறது. ஆனால் கவிஞர் சினேகன், இணையதளத்தில் கிடைத்த முகவரி, போலி என்று குறிப்பிட்டிருக்கிறார். என்மீது அவதூறாகக் குற்றம்சாட்டிய கவிஞர் சினேகன், பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால், அவர்மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்” என்றார்.