மகேந்திரன்..
கந்திலி அருகே கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த செல்ரப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இளம் பெண்ணின் சடலத்தை மீட்ட கந்திலி காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தற்கொலையா கொலையா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் செருப்பை வைத்து விசாரணை மேற்கொண்டதில் செல்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசனின் மகள் சந்தோஷ் பிரியா தான் அது என்பது தெரியவந்தது. இந்த நிலையில் சந்தோஷ் பிரியா கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போபதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அதோடு தங்கள் பெண் காதலருடன் சென்றுவிட்டதாக நினைத்ததாகவும் பெற்றோர் தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சந்தோஷ் பிரியா காணாமல் போன ஒரு மாதம் கழித்து கடந்த 23-ம் அவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் தொடர்ந்து இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தனர். அப்போது சந்தோஷ் பிரியாவின் செல்போன் ஐஎம்மி நம்பர் பயன்பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த போனை பயன்படுத்திய நபரை பிடித்து விசாரணை செய்ததில் செல்லரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் தன்னிடம் போனை விற்றதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் கந்திலி போலீசார் செல்லரப்பட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதான மகேந்திரனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது
அப்போது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சந்தோஷ் பிரியாவின் தாத்தா தன்னை அடித்ததாகவும், அதன் காரணமாக தற்போது அவரைப் பழி வாங்க அவரது பேத்தியை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி கொலை செய்யப்பட்ட அன்று, சந்தோஷ் பிரியாவை தனது இருசக்கர வாகனத்தில் அமர சொல்லி வற்புறுத்தியதாகவும், அதன் காரணமாக தன்னை சந்தோஷ் பிரியா கன்னத்தில் அறைந்ததாகவும் மகேந்திரன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அவரின் கழுத்தை நெரித்து கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார்.
மேலும் இதுகுறித்து பெண்ணின் பெற்றோர்கள் கூறுகையில், நான்கு வருடங்களுக்கு முன்பு சந்தோஷ் பிரியாவின் உள்ளாடைகளை மகேந்திரன் திருடி சென்றததாகவும், அதனால் தான் அவரது தாத்தா மகேந்திரனை அடித்ததாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கந்திலி போலீசார் மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 4 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.