வவுனியா ஆசிகுளத்தில் வட மாகாண சுகாதார அமைச்சரால் உப தபாலகம் திறந்து வைப்பு!!(படங்கள்)

522

1 2 3 4

இன்று பல அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் வாக்குகேட்பதற்காக மட்டும் மக்களிடம் செல்லுவதும் தேர்தல் முடிந்தவுடன் மக்களை சந்திக்காத அரசியல்வாதிகள் உள்ளனர். இந்த அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டுமென வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா ஆசிகுளத்தில் புதிதாக நிறுவப்பட்ட உப தபாலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா தெற்கு பிரதேச சனசமூக நிலையங்களின் தலைவர் திரு.தாவீது தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்..

நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல் காலத்தில் வீடுவீடாக வாக்குக் கேட்டு மக்களிடம் சென்ற போது பலர் என்னிடம் கேட்ட கேள்வி என்னவென்றால் தேர்தல் முடிந்தவுடன் எங்களை மறந்து விடுவீர்கள் என்பதுதான். இது அவர்களின் கடந்த கால அனுபவமாக இருந்திருக்கலாம்.

தேர்தல் முடிந்தவுடன் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்த போது ஆசிகுளம் மக்களால் இந்தப் பகுதியில் உபதபாலகம் ஒன்று அமைக்கப்படவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

உடனடியாகவே மத்திய அஞ்சல் சேவை அமைச்சர் கௌரவ ஜீவன் குமாரணதுங்க அவர்களுடன் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்த போது உடனடியாகவே அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடமாகாண பிரதி அஞ்சல் மாஅதிபர் அவர்களின் நடவடிக்கையினால் இன்று இந்த உபதபாலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் கௌரவ அஞ்சல் சேவைகள் அமைச்சர் அவருக்கு இந்தப் பிரதேச மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று எமது இனம் அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. 30 வருட கொடிய யுத்தம் பல வழிகளிலும் எம்மை பாதித்துள்ளது. எனவே அவர்களுக்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடப்பாடு இந்த மாகாண சபைக்குள்ளது.

அதேநேரம் இதற்கு சமாந்திரமாக தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு நோக்கிய வேலைத்திட்டங்கள் எமது மூத்த அனுபவமிக்க அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றார்.

இந்த நிகழ்வில் வடமாகாண பிரதி அஞ்சல் மாஅதிபர் திரு.என்.ரட்ணசிங்கம், வவுனியா பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் திருமதி எம்.ஜி.எல்காடோ, வவுனியா பிரதம தபால் அதிபர், ஆசிகுளம் கிராம சேவகர், பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.