2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கவுள்ள மின்வெட்டு : அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

529

மின்வெட்டு..

நாட்டின் மின்சார விநியோகத்திற்காக உரிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படாவிட்டால் 2027 ஆம் ஆண்டு வரை பல்வேறுப்பட்ட சந்தர்ப்பங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.



அரசாங்கம் மற்றும் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இலங்கை மின்சார பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார நுகர்வு 20% க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தினசரி மின் நுகர்வு விகிதம் குறைந்தபட்சம் 48 மெகாவோட் என்றும், நண்பகல் நேரத்திற்கு 2,800 மெகாவோட் மின்சாரம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களில், மின் நுகர்வு 38 முதல் 40 மெகாவோட் மணி வரை இருந்ததாகவும் கூறப்படுகின்றது. நண்பகல் நேரத்தில் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு 2,100 மெகாவோட்டாக குறைக்கப்பட்டது. இது 20% குறைப்பை பிரதிபலிக்கிறது என்று ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இது தொடர்பான தீர்மானம் இலங்கை மின்சார சபையால் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழந்துள்ளதாகவும், அதன் கோளாறை கண்டறியும் பணியில் தொழில்நுட்பவியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டாவது தொகுதியில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்ற போதும் மூன்றாவது தொகுதி தொடர்ந்து இயங்கி வருகிறது. மின் விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு முனையம் மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மின்வெட்டு நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலையிலேயே 2027 ஆம் ஆண்டு வரை பல்வேறுப்பட்ட சந்தர்ப்பங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

-தமிழ்வின்-