இந்தியாவில்..
இன்று அநேக வீடுகளில் எண்ணெய்களில் பொரித்த உணவுகள், பலகாரங்கள் என விதவிதமாக சாப்பிடும் நிலையில், இந்தியாவில் ஒரு கிராமத்தில் இவ்வாறான உணவுகளை வீட்டில் செய்யாமல், ஒரு தோசை கூட சுட்டு சாப்பிடாமல் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு கர்ப்பிணி பெண் சாபம் என்று கூறப்படுகின்றது.
திருவண்ணாமலை அருகேயுள்ள பண்டிதப்பட்டு, செ.அகரம், சின்னகோளாப்பாடி, பெரியகோளாப்பாடி, தீர்த்தமலை கிராமங்களில் வசிக்கும் 80 சதவிதம் மக்கள் எண்ணெய்யில் பொறித்த உணவுகள், பலகாரங்கள், தோசை முதற்கொண்டு வீட்டில் செய்யாமல் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து ஊர் பெரியவர்கள் கூறுகையில், இருபது தலைமுறைக்கு முன்பு எங்க முன்னோரின் குடும்பத்தில் 6 பசங்க. அதில் ஐந்து ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை. பெண் பெயர் சந்தியம்மா. அண்ணன், தம்பிங்களுக்கு கல்யாணமாகி கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்துக்கிட்டு இருந்திருக்காங்க.
கடைக்குட்டியான சந்தியம்மா மீது அண்ணன் தம்பிகள் அதிக பாசம் வச்சி இருந்தாங்க. சந்தியம்மாவை கல்யாணம் செய்து புகுந்த வீடு அனுப்பிட்டாங்க. தலைபிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு அழைத்து வந்த சந்தியம்மாவுக்கு வாய்க்கு ருசியா யாரும் எதுவும் செய்து தரல.
அம்மா இல்லாத பிள்ளையால் அண்ணிங்கக்கிட்ட உரிமையா கேட்க முடியல. அந்த ஏக்கத்திலேயே இருந்திருக்கு. அடிக்கடி பொறந்த பொண்ணுக்கும் வாழ வந்த மருமகளுகளுக்கும் சண்டை வந்திருக்கு.
ஒருநாள் அண்ணனுங்க எல்லாம் விவசாய வேலைக்கு போனதுக்கப்பறம் வீட்டுக்கு வந்த மருமகளுங்க கூட்டுசேர்ந்து கேழ்வரகு (ராகி) இடிச்சி வடை சுட்டு சாப்பிட்டிருக்காங்க.
புள்ளதாச்சியா இருந்த நாத்தனார்க்கு கொஞ்சம் கூடதரல, இதனால் மனசு உடைஞ்சிப்போன சந்தியம்மா கோபத்தில் அழுதுக்கிட்டே வீட்டுக்கு பக்கத்தல இருந்த கிணத்துல விழுந்து உயிர விட்டுடுச்சி.
மாலை வீட்டுக்கு வந்த அண்ணனுங்க தங்கச்சிய காணலயேன்னு தேடினப்ப கிணத்துல பிணமா மிதக்கறத பார்த்து கண்ணீர் விட்டு அழுதாங்க. சடங்குகள் செய்து அடக்கம் செய்த அண்ணன் தம்பிகளுக்கு, தங்கச்சி ஏன் செத்துச்சின்னு தெரிஞ்சிக்க முடியாமல் இருந்த நிலையில் குல தெய்வம் மூலமாக தெரியவந்த உண்மை.
குலதெய்வம் அய்யனார்க்கு கிடாவெட்டி வேண்டிக்கிட்டதும், அண்ணனுங்க 5 பேர் கனவுலயும் அய்யனார் வந்து உங்க பொண்டாட்டிகளால மனசு உடைஞ்சிப்போன சந்தியம்மா தற்கொலை செய்துக்கிச்சி.
உங்க தங்கச்சி சாகும்போது, இனிமே நான் பிறந்த வம்சத்தல யாரும் எண்ணெய் பலகாரங்கள் செய்யகூடாது, மீறி பாலகாரங்கள் செய்தால் அந்த குடும்பத்தில் உள்ளவங்களுக்கு எண்ணெய் கொப்பளம் போட்டு இறந்து போய்டுவாங்கன்னு சாபம் விட்டிருக்குன்னு சொன்னார் அய்யனார்.
அதன்பின் இறந்துபோன சந்தியம்மாவ எங்க முன்னோர்ங்க தெய்வமாக்கி கோயில் கட்டி வணங்க தொடங்கினாங்க. நாங்களும் அப்படியே செய்யறோம். எங்கள் வம்சம் பெருகி இப்போது 5 கிராமங்கள்ள, வெளிநாடுகள்ள இருக்காங்க.
நாடுவிட்டு நாடு போனாலும், எவ்வளவு வசதி வாய்ப்பிருந்தாலும் நாங்க வாழும் வீட்டில் எண்ணெய் பலகாரங்கள் செய்யமாட்டோம். எங்க வம்சத்தல பொறக்கும் பெண்கள் கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் வீட்ல எதுவும் செய்யமாட்டாங்க. கல்யாணம் செய்துக்கிட்டு கணவன் வீட்டுக்கு போனபிறகு அவுங்கள அந்த சாபம் கட்டுப்படுத்தாது. அவுங்க புகுந்த வீட்ல எண்ணெய் பொருட்கள் செய்யலாம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு, சிலகுடும்பத்தார் சாபத்த மீறி எண்ணெய் பொருட்கள செய்தாங்க. அப்படி செய்து சாப்பிட்ட மூனாவது நாள் அந்த வீடுகளில் இருந்த எல்லார்க்கும் கொப்பளம், கொப்பளம்மா உடம்புல வந்துடுச்சி, ஆஸ்பிட்டல் போனாங்க சரியாகல.
கடைசியா அய்யனார்க்கிட்டயும், சந்தியாம்மன் கிட்டயும் கிடா வெட்டறன்னு வேண்டனதுக்கப்பறம் அவுங்க உடம்புலிருந்த கொப்பளம் தழும்பேயில்லாம மறைந்தது. அதுக்கப்பறம் யாரும் அந்த விஷப்பரிச்சையில இறங்கறதேயில்ல என்ற உண்மையைக் கூறியுள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் குலசாமி அய்யனார்க்கும், சந்தியம்மனுக்கும் திருவிழா எடுக்கிறார்கள் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள். திருவிழாவின் போது சந்தியம்மன் கோவில் வளாகத்தில் தங்கள் வம்சத்தில் பிறந்த வயதான பெண்மணி விரதமிருந்து எண்ணெய் சட்டியில கொதிக்கும் நெய்யில் வடை, பனியாரம் சுட்டு சந்தியம்மாளுக்கு படைப்பர்.
ஆயிரக்கணக்கான மக்கள் அதில் கலந்துக்கொள்வார்கள். அன்று ஒருநாள் மட்டும் அந்த வம்வசத்தில் பிறந்த பெண்கள், வீட்டுக்கு வெளியே சாலையோரம் அடுப்பு வைத்து எண்ணெய் வானலில் வடை சுட்டு தான் பிறந்த குடும்பத்துக்கு தருவார்கள், அப்போதும் வீட்டுக்கு வந்த மருமகள்கள் செய்யமாட்டார்கள்.
தீபாவளி, பொங்கல், அம்மாவாசை மட்டும்மல்ல அதன்பின் எப்போதும் வீடுகளில் எண்ணெய் பலகாரங்கள் செய்யமாட்டார்கள். குழந்தைகள் வடை வேண்டும், அப்பளம் வேண்டும் எனக்கேட்கும்போது கடைகளில் வாங்கி தந்து அவர்களை சமாதானம் செய்கிறார்கள் என்ற உண்மைச் சம்பவத்தை விளக்கியுள்ளனர்.
உங்க மேல பாசம் வைக்கிறவங்களை காக்க வைக்காதீங்க – காணோளியினை பாருங்கள்