சைக்கிளிங் பயிற்சியால் ஏற்பட்ட அசாதாரண மாற்றம் ; நிரூபித்துக்காட்டிய யாழ் துரை கோபிநாத்!!!

941

துரை கோபிநாத்..

துரை கோபிநாத் யாழ்ப்பாணத்தின், காங்கேசன்துறை, தையிட்டி எனும் ஊரில் பிறந்து தனது ஆரம்ப கல்வியை யா/ நடேஸ்வரா கல்லூரி – காங்கேசன்துறை மற்றும் யா/ சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திலும் மேலும் யா/ தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் நிறைவு செய்தவர்.

தற்போது இவர் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நெல்லியடி பிராந்தியத்தின் பிராந்திய முகாமையாளராக கடமை புரிந்து கொண்டிருக்கின்றார். திரு.கோபிநாத் அவர்கள் என்றுமே விளையாட்டின் மீது அதீத ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்.



பாடசாலைக் காலங்களின் பின்னரான காலங்களில் கூட பேட்மின்டன், நீச்சல், கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை தனது உடற்பயிற்சிக்காகவும் போட்டிகளுக்காகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தார்.

தனது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மரதன் ஓடுவதை கைவிட வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டதன் பின்னர் பேட்மின்டன் விளையாடுவதிலும் காலில் ஏற்பட்ட உபாதை பெரும் சிரமங்களை அவருக்கு உண்டுபண்ணிய போதிலும்,

நீச்சலில் எனது ஆர்வத்தை முழுமையாக செலுத்தி வந்தார். இருந்தபோதிலும் வேலைப்பளு காரணமாக இதற்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரமும் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் முழுமையாக உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரங்கள் குறைவடைந்த நிலையில் உடற் பருமன் அதிகரித்து தனது மொத்த நிறை 96 கிலோகிராம் ஆக இருந்ததை உணர்ந்தவர்.

உடற்பயிற்சிக்காக ஏதாவது ஒரு விளையாட்டை தினமும் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சைக்கிளிங்கை தனது பயிற்சிக்கான விளையாட்டாக தேர்வு செய்தார்.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சாதாரண பாவனையிலுள்ள ஒரு துவிச்சக்கர வண்டியை தனது பயிற்சிக்காக சில மாற்றங்களோடு தேர்வு செய்து தினமும் மிதிவண்டியில் தனது பயிற்சியை தொடர்ந்தார்.

அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் உலகையே திருப்பிப்போட்ட கொரோணாத் தாக்கத்தின் காரணமாக முழு நாடும் முடக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே முடங்கி இருந்த நிலையில் தனது உடற்பருமன் மேலும் அதிகரித்து இருப்பதை உணர்ந்து இதன் பின்னரான காலங்களில் தினமும் சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார்.

சைக்கிளோட்டத்தின் போது தன்னில் ஏற்படத் தொடங்கிய மாற்றங்களை அவதானித்தவர். அதன் மீது தீராத காதல் கொண்டார். திரு. கோபிநாத் அவர்கள் தனது தேடல் காரணமாகவும் நண்பர்கள் மூலமாக கிடைத்த அறிவுரைகளின் மூலம்,

சைக்கிளிங் பயிற்சியின் அடுத்த தளத்திற்கு தன்னை நகர்த்தினார். மிதிவண்டி பயிற்சிக்காக மட்டுமல்லாது தேசிய ரீதியான போட்டிகளிலும் பங்கு பற்றுவதற்காக தன்னை தயார்படுத்த ஆரம்பித்தார்.

அதற்காக சாதாரண மிதிவண்டியில் இருந்து வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாவனையிலுள்ளதுவும் போட்டிகளில் பொதுவாகப் பயன்படுத்தக்கூடியதுமான றோட் பைக் (Road Bike) என்று அழைக்கப்படக்கூடிய மிகவும் பாரம் குறைந்த காபன் எனும் உலோகத்தினாலான சைக்கிளை தனது பயிற்சிக்கும் போட்டிகளுக்குமாக தெரிவு செய்தார்.

வட-கிழக்கை மையமாக கொண்டு இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட ரைடர்ஸ் ஹாப் சைக்கிளிங் கழகத்தின் வடக்குக்கான செயற்பாட்டாளர்களான இருவரில் ஒருவராக இயங்கி வருகின்றார்.

இதன் மூலம் வட கிழக்கில் விழிப்புணர்வு செயற்பாடுகள் மூலமாக மிதிவண்டியின் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் அதன் பயன்கள் போன்றவற்றை தமிழ் பேசும் சமூகத்தின் இடையே ஊக்ககப்படுத்தியும் வருகின்றார்கள்.

இதுவரை சுமார் 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் எட்டியுள்ள திரு. கோபிநாத் அவர்கள் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற றேஸ் த பேர்ல் (Race the pearl) எனும் சைக்கிள் அஞ்சலோட்டப் போட்டியில் தனது கழகம் சார்பாக கலந்து பருத்தித்துறை முதல் வவுனியா வரையான தூரத்தை ஐவரில் முதலாமவராக (சுமார் 154Km தூரத்தை) அஞ்சல் குழுவிற்காக ஓடினார்.

இப்போட்டி இலங்கையில் மிகவும் நீளமான 614Km தூரத்தை உடைய போட்டியாகும், இது பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை வரையானது, இதனை 24 மணித்தியாலத்திற்குள் கடந்துவிட வேண்டும் இதில் இவர்களது கழகம் பங்கேற்ற முதற்தடவையே ஐந்தாமிடத்தை தக்கவைத்துக் கொண்டது.

இங்கையின் முதலாவது மருத்துவ கல்லூரியான மானிப்பாய் கிரீன் மெமோரியல் வைத்தியசாலையின் புனருத்தாரண வேலைகளுக்காக நிதி திரட்டும் சைக்கிள் ஓட்டம் இவ்வருடத்தில் கடந்த 2022 பெப்ரவரி மாதம் நடைபெற்ற றைட் போர் சிலோன் (Ride for Ceylon) கலந்து கொண்டார்.

இந்த சைக்கிளோட்டம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான தூரத்தை திருகோணமலை, வவுனியாக ஊடாக 04 நாட்கள் கொண்ட பயணமாக மைந்திருந்தது இதில் சைக்கிளோட்டியாக கலந்து தனது பங்களிப்பைச் செய்திருந்தார்.

கடந்த மாதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “பெட்ரோல் எமது வாழ்க்கையைத் தீர்மானிக்க முடியாது” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற சைக்கிள் ஓட்ட விளிப்புணர்வுப் போட்டியில் ஏற்பாட்டாளர்கள் சார்பில் கலந்து கொண்டிருந்தார்.

அதுபோலவே தனது சைக்கிளின் மேலுள்ள தீராத் தாகத்தின் காரணமாக ஏனையோருக்கும் இதனை சென்றடையச் செய்யும் நோக்கில் நேற்று கொழுப்பில் இருந்து புத்தளம் ஊடாக யாழ்ப்பாணம் வரையான 401 கிலோமீட்டர் தூரத்தை,

22 மணித்தியால மொத்த நேரத்தில் இயங்கு நேரமாக 14 மணி 45 நிமிடங்களில் பயணித்து யாழ்ப்பாணத்தை நள்ளிரவு மூன்று மணிக்கு அடைந்திருந்தாதார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது உடல் எடையை குறைப்பதற்கான ஆரோக்கியத்தை நோக்கி ஆரம்பித்த சைக்கிளிங் பயணம் இன்று அவரை தேசிய ரீதியிலான சைக்கிள் ஓட்டிகளிடையேயான அவரது அடையாளமாகும்.

இந்த பயணத்தை ஆரம்பிக்கும் போது அவரது உடல் எடை 96 Kg இலிருந்தது. ஆனால் தற்போது 74 Kg ஆக குறைந்துள்ளதமை இவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றியும் அங்கீகாரமுமாகும். சைக்கிள் ஓட்ட பயிற்சியானது சகல வயதினருக்கும் உகந்த ஒரு பயிற்சியாகும்.

இப்பயிற்சியானது தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இதய நோய்கள், குருதியில் கொழுப்பின் அளவு அதிகமாக காணப்படுதல், உயர் குருதி அழுத்தம், மூட்டு வருத்தங்கள் மற்றும் சிலவகை புற்றுநோய்களில் இருந்தும் எம்மை பாதுகாக்கின்றது என்பதே சைக்கிள் ஓட்டத்தின் மூலம் இவர் எமக்குச் சொல்லும் செய்தியாகும்.