வவுனியாவில் நடைபெறவுள்ள புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதின அழைப்பிதழ்!!

389

P P1

வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும் தொழிற் சங்கங்களும் பொது அமைப்புக்களும் இணைந்து ஐக்கியப் பட்ட மேதினத்தை வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ளன.

அந்த வகையில் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், பெண்கள், மற்றும் உழைப்பாளர்களதும் உரிமைகளை வென்றெடுக்கவும் சிறுபான்மை இனங்களின் சுதந்திரத்தை மீட்டெடுக்கவும், நாட்டின் இறைமையையும் ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளிடமிருந்து பாதுகாக்கவும் தியாகமிக்க மக்களதும், கட்சிகளினதும், தொழிற்சங்கம் மற்றும் பொது அமைப்புக்களினதும் ஐக்கியம் இன்றைய சூழலில் வேண்டியதாகவுள்ளது.

அதன் அடிப்படையில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும் ஏனைய தொழிற் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களும் இணைந்து மேதின நிகழ்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் என்.பிரதீபன், வவுனியா நெற் இணையத்திற்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது உலக முழுவதிலும் ஏகாதிபத்தியங்களதும் மேலாதிக்க வாதிகளதும் ஈவிரக்கமற்ற நடவடிக்கையால் நாடுகள் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றன. சர்வதேச பாட்டாளி வர்க்கம் வாழவழியின்றித் தவிக்கின்றது.

ஆகவே தான் ஒவ்வொரு நாடுகளினதும் பாட்டாளி மக்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள், தேசிய வாதிகள் தத்தமது நாடுகளின் சுதந்திரத்துக்காக போராட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் எமது நாட்டையும் ஏகாபத்திய மேலாதிக்க சகதிகளின் கரங்களில் இருந்து பாதுகாக்கவேண்டியுள்ளது.

இலங்கையில் சிறுபான்மை இனங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன ஒடுக்கல் நடைமுறைகள் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை மறுப்பதுடன் ஏகாபத்திய மேலாதிக்க சக்திகளை உள்ளெடுக்க வகை செய்கின்றது. கடந்த கால வரலாறு அதனையே எமக்கு காட்டுகிறது.

அதனால் தான் சிறுபான்மையினரின் விடுதலை நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரினதும் கடமையாகிறது. நாட்டின் சுய உற்பத்தியின்மையாலும் அதிகரித்துச் செல்லும் விலைவாசி உயர்வாலும் வேலையின்மையாலும் வாழமுடியாது சொல்லொணாத் துன்பத்தை உழைப்பாளர்கள் எதிர்நோக்கி நிற்கின்றனர்.

வாழ்வுரிமைக்கான போராட்டங்கள் துப்பாக்கி குண்டுகளால் தடுக்கப்படுகின்றன. சுதந்திர வர்த்தக வலயத்தில் றொசான் சுட்டுக் கொல்லப்பட்டார். எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து புத்தளத்தில் வீதியிலிறங்கிய மீனவர் பெர்னான்டோ சுட்டுக் கொல்லப்பட்டார். சுத்தமான குடிநீர் கேட்டதற்காக நான்கு பொது மக்கள் உட்பட ஒரு மாணவனும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அத்துடன் சிறுபான்மை இன மக்களான முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் அடிப்படைவாத கச்திகளால் மூடப்படுவதுடன் முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் கிளிநொச்சி தர்மபுரத்தில் தன்னுடைய உறவுகளை மீட்டுத் தருமாறு கோரிய தாய் ஜெயக்குமாரி மகள் விபூசிகா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவை இலங்கையின் அண்மைக்கால நிகழ்வுகள.

தொடர்ச்சியாக ஆளும் முதலாளித்துவ பேரினவாத மேலாதிக்க எடுபிடி அரசாங்கங்கள் நாட்டு மக்கள் மீதும் சிறுபான்மை இனங்கள் மீதும் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் இழைத்து வரும் அநீதிகளுக்கு அனைவரும் ஒன்றிணைந்து போராடி உரிமைகளை நிலை நாட்டுவது அவசியமாகின்றது.

இந்த வகையில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, சுதேசிய சிறு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம், வவனியா சிறு வியாபாரிகள் சங்கம், வவுனியா நன்னீர் மீனவர் கூட்டுறவுச் சங்கம் ஸ்ரீலங்கா ஜனரய சுகாதார சேவைகள் சங்கம், வீதிப் பராமரிப்புத் தொழிலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தொழிலார்கள், தேசிய கலை இலக்கியப் பேரவை, மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, என்பன இணைந்து மேதின ஊர்வலத்தையும் பொதுக் கூட்டத்தையும் நடாத்துகின்றன.

ஊர்வலம் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து மு.ப 9.30. மணிக்கு ஆரம்பமாகின்றது. பொதுக்கூட்டம் வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் மு.ப 10.30 மணிக்கு ஆரம்பமாக இருக்கின்றது. ஆகவே தொழிலாளர்,விவசாய சக்திகளை ஊர்வலத்திலும் பொதுக்கூட்டத்திலும் பங்கு பெற புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.