பிரித்தானியாவில்..
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளிச் சிறுவன் ஒருவன் திடீரென மரணமடைந்தான். அவனுடைய உடல் உறுப்புக்களை தானம் பெற்ற நபரும் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து அதிர்ச்சியளிக்கும் ஒரு உண்மை தெரியவந்தது.
மேற்கு லண்டனில் வாழ்ந்துவந்த ஹித்தேந்திரா கோதானியா, புஷ்பா தம்பதியரின் மகனான ரோஹன் கோதானியா (Rohan Godhania, 16) என்ற அந்த சிறுவனுடன் படித்த மாணவர்கள் அனைவரும் இன்று தங்கள் பள்ளிப்படிப்பை முடித்ததைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, ரோஹனுடைய பெற்றோர் மட்டும் அவனது இரண்டாவது ஆண்டு நினைவுநாளை அனுசரித்துக்கொண்டிருக்கிறார்கள், விடை கிடைக்காத பல கேள்விகளுடன்..
2020ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 15ஆம் திகதி, தன் பெற்றோர் மற்றும் சகோதரி அலிஷா ஆகியோருடன் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்த ரோஹன், திடீரென வாந்தியெடுக்க, மகன் சாப்பிட்ட ஏதோ ஒரு பொருள் அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றுதான் அவனுடைய பெற்றோர் நினைத்தார்கள்.
ஆனால், சரியாக 48 மணிநேரத்திற்குப் பின் ரோஹன் இந்த உலகத்தை விட்டு, தனது அன்புக் குடும்பத்தை விட்டு கடந்துபோய்விட்டான். ஆம், வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து மறுநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோஹனுடைய உடல்நிலை வேகமாக மோசமடைய, அவனுடைய மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
ஆகத்து மாதம் 18ஆம் திகதி மாலை 5.03 மணிக்கு ரோஹனுடைய உயிர் பிரிந்துவிட்டது. இதற்கிடையில், ரோஹனுடைய உடல் உறுப்புக்களை தானம் கேட்டிருக்கிறார்கள்.
மகனை இழந்த சோகத்தில் தவித்துக்கொண்டிருந்த பெற்றோர், அவன் எதனால் உயிரிழந்தான் என்பது கூட தெளிவாக தெரியவராத நிலையில், வேறு வழியில்லாமல் உறுப்பு தானம் செய்ய சம்மதிக்கவைக்கப்பட்டார்கள்.
ஆம், ரோஹன் உயிரிழந்து 13 மாதங்களுக்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ரோஹனின் பெற்றோர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அங்கு சென்ற ரோஹனின் பெற்றோருக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தி காத்திருந்தது. அது என்னவென்றால், ரோஹனின் உடல் உறுப்பு ஒன்றை தானம் பெற்ற நபரும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரை சோதனை செய்தபோது, அவருக்கு, ornithine transcarbamylase (OTC deficiency) என்னும் அபூர்வ மரபியல் குறைபாடு இருந்தது தெரியவந்தது. அதைவிடக் கொடுமை என்னவென்றால், அந்த நோய் ரோஹனிடமிருந்து அந்த நபருக்கு உறுப்பு தானம் மூலம் பரவியிருந்தது என்பதுதான்.
அதாவது, ரோஹன் OTC deficiencyஎன்னும் பிரச்சினையால்தான் உயிரிழந்திருக்கிறான். அதை அவன் உயிரிழந்தபோது மருத்துவர்கள் கண்டுபிடிக்கவில்லை.
ஆக, ரோஹனின் பெற்றோர் மனதில் பல கேள்விகள், தங்கள் மகனுடைய மரணத்துக்கான காரணம் ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை, மரணத்துக்கான காரணம் தெரியாமலே ஏன் அவனுடைய உடல் உறுப்புக்களை தானம் செய்ய மருத்துவமனை வற்புறுத்தியது? என்னும் கேள்விகளுக்கு அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை.
மற்றொரு முக்கிய விடயம், தங்கள் மகன் இந்த பிரச்சினையால் உயிரிழந்தான் என்று தெரிந்திருந்தால், அவனது உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருக்காதே, அவனால் மற்றொரு நபருக்கும் பிரச்சினை ஏற்பட்டுவிட்டதே என்ற கவலையும் அவர்களுக்கு.
கோவிட் காலகட்டத்தில் ரோஹன் உயிரிழந்ததால் அவனுடைய இறுதிச்சடங்கு கோவிட் கட்டுப்பாடுகளுடன்தான் நடைபெற்ற்ள்ளது. இப்போது அவனது இரண்டாவது ஆண்டு நினைவுநாளை நினைவுகூற ஏராளமானோர் கூட முடிவுசெய்துள்ளார்கள்.
ஆனால், ரோஹனுடைய நண்பர்கள் பலர் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்ததைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், தாங்களோ, பள்ளிப்படிப்பை முடித்து பல்கலைக்கழகத்தில் சேர ஆசைப்பட்ட தங்கள் மகனுடைய நினைவுநாளை அனுசரிக்கும் நிலையிலிருக்கிறோமே என்று எண்ணி கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள் ரோஹனின் பெற்றோர்.