ந(ர)கரத்தில் வாழ்ந்தாலும் நான் கிராமத்தில் பிறந்தவனே…..

544

வாய்கால் தண்ணீரில்
மூழ்கிக் குளித்து
வரும் சிறுநீரையும்
கலக்க விட்டு
மேல் தண்ணீர் விலக்கி
இருகைகள் இணைத்து
அள்ளிப் பருகுவேன்
அப்போது புது
உற்சாகம் என்னுள்
பிறக்கும்..

இப்போ
கூல்வாட்டர் குடிக்கின்றேன்
குனிர் காய்ச்சல்
அடிக்கின்றது…

ஒல்லித் தேங்காய்க்கு
பூவரசம் தடி சீவி
கொம்புகள் அமைத்து
முள்முருக்கம் சோத்தியிலே
வண்டி செய்து
தங்கையை அதில் அமர்த்தி
வெட்ட வெளி வெயில் எல்லாம்
இழுத்து திரிவேன்
இன்னும் விளையாட வேண்டும்
இரவு வரக்கூடாது என்பேன்…

இப்போ
ஏசிக்கார் கதவை
திறந்து எட்டிப்பார்த்தாலே
எனக்கு லேசாக
தலைவலிக்கும்…

குண்டு மணி கோர்த்து
தங்கைக்கு அணிந்து
பனை ஓலையில் செய்த
மணிக்கூடு நான் அணிந்து
வயல் காட்டு வைரவர்
கோவிலுக்கு
வடை மாலை சாற்றுதற்கு
வண்டிகட்டி அப்பாவோடு
நாம் போவோம்…

பூஜை முடிந்ததும்
மூக்கு வரை உண்பேன்
முடியவில்லையன்றால்
மூன்று துள்ளுத்துள்ளி
முழுவதையும் செமிக்க
வைப்பேன்…

இப்போ
பத்துப்பவுண் கழுத்தில் அணிந்து
எட்டு இலட்ச கடிகாரம் கட்டி
நாகரீகம் என்ற பெயரில்
நான்கு வாய் உண்பதற்குள்
நாவு வறள்வது போல்
இருக்க
நாடுவேன் வைத்தியரை
அவர்
நானுாறு காட்டுதென்பார்
என் குருதி அழுத்தம்.

-திசா.ஞானசந்திரன்-