கனடாவில் புலம்பெயர்ந்த பெண் ஒருவர் சந்தித்த ஏமாற்றங்கள்!!

2550

மிஸ்பா நூர்..

கனடாவுக்கு வந்தால் வாழ்வே பிரகாசமாகிவிடும் என நினைத்து புலம்பெயர்ந்தவர்களில் ஒருவர் மிஸ்பா நூர். ஆனால், அவர் சந்தித்த ஏமாற்றங்களை எண்ணும்போது, இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் கனடாவுக்கு புலம்பெயர்ந்திருக்கவேமாட்டேன் என்கிறார்.

பணம் சேமிப்பதற்காக குறைவாக சாப்பிட்டு 10 கிலோ எடை குறைந்ததை மறக்கமுடியாது என்கிறார் கனடாவுக்கு புலம்பெயர்ந்த பெண் ஒருவர். 2015ஆம் ஆண்டு கனவுகளுடன் பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தது மிஸ்பா நூரின் குடும்பம்.

ஆனால், பாகிஸ்தானில் பிரபல வங்கி ஒன்றில் கிளை மேலாளராக பணியாற்றிய மிஸ்பாவின் கணவருக்கு கனடாவில் கிடைத்த வேலையோ, கட்டிடங்களில் கார்ப்பெட் போடுவது.

அதிர்ச்சியடைந்தாலும் இரண்டு பிள்ளைகளையுடைய அந்தக் குடும்பம் வாழ்க்கை நடத்தவேண்டுமே. வேறு வழியில்லாமல் அந்த வேலையை கஷ்டப்பட்டு செய்துகொண்டிருந்தார் மிஸ்பாவின் கணவர்.

சொந்த நாட்டில் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்த்ததுபோய், முழங்கால் போட்டு கார்ப்பெட் விரித்து கால் முட்டியில் பேண்ட் கிழிந்து, கைகள் காய்த்துப்போய், படிகளில் ஏறி தளர்ந்து வீடு திரும்பிய கணவனைக் கண்ட மிஸ்பாவுக்கு, இதற்கா கனடாவுக்கு வந்தோம் என்று ஆகிவிட்டது.

ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பு, போதுமான மேசை நாற்காலி முதலான மரச்சாமான்கள் கூட இல்லாமல், சொந்த நாட்டை, உறவுகளைப் பிரிந்து தெரியாத ஒரு நாட்டுக்கு வந்து, நாளை என்ன செய்வது என்ற அச்சத்துடன் வாழ்வைத் தொடரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது மிஸ்பா குடும்பத்துக்கு.

சொந்த நாட்டில் பெரிதாக யாருடனும் பேசக்கூட செய்யாத மிஸ்பா, இப்போது தனக்கும் எப்படியாவது ஒரு வேலை கிடைத்தால் கணவரின் பாரம் கொஞ்சம் குறையும் என்று எண்ணி, அக்கம்பக்கத்தவர்களிடம் எல்லாம் தனக்கு வேலை ஏதாவது கிடைக்குமா என விசாரிக்கத் துவங்கியுள்ளார். ஆனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.

மன அழுத்தம் ஒரு பக்கம், பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக குறைவாக சாப்பிட்டது மறுபக்கம் என 10 கிலோ எடை குறைந்துவிட்டிருக்கிறார் மிஸ்பா.

இப்படியே இரண்டரையாண்டுகள் ஓடிவிட்ட நிலையில், ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மிஸ்பாவின் மகன், தங்கள் பள்ளியில் மதிய உணவு மேற்பார்வையாளர் வேலையை விட்டுச் செல்வதாகக் கூற,

உடனே பள்ளிக்குச் சென்று தனது பட்டப்படிப்பு, ஆசிரியை அனுபவம் ஆகியவை குறித்து விளக்க, நல்மனம் கொண்ட அந்தப் பள்ளியில் பிரின்சிபல், அந்த வேலை கிடைக்க உதவியிருக்கிறார். என்றாலும், அது பகுதி நேர வேலைதான்.

இதற்கிடையில் மிஸ்பாவின் கணவருக்கும் ஃபோர்க் லிப்ட் ஆபரேட்டராக ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது.

பல கஷ்டாங்களுக்குப் பிறகு, மிஸ்பாவுக்கும், அவரது கணவருக்கும் பதவி உயர்வு கிடைக்க, இப்போது வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார்களாம் அவர்கள்.

ஆனால், இவ்வளவு நாள் பட்ட கஷ்டம், அனுபவித்த மன அழுத்தம் எல்லாம் சேர்ந்து பல பாதிப்புகளை மிஸ்பாவுக்கு ஏற்படுத்தியுள்ளன. தனது ஞாபக சக்தியில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக உணர்கிறார் மிஸ்பா. அவரது கணவருக்கோ, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு ஆகிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

ஆக, இப்போது பொருளாதார ரீதியாக ஒரு நிலைத்தன்மை ஏற்பட்டுவிட்டது, ஒரு வீடும் வாங்கியாயிற்று. ஆனால், அதற்காக தாங்கள் இழந்தது அதிகம் என்று எண்ணுகிறார் மிஸ்பா.

ஒருவேளை காலத்தை பின்னோக்கி நகர்த்தக்கூடுமானால், புலம்பெயர்வதைக் குறித்து ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்திருப்பேன் என்று கூறும் மிஸ்பா, அது நாங்கள் நினைத்தது போல் எளிதல்ல, மிகவும் கடினம் என்கிறார்.