சிறுநீரக மோசடி குறித்து விசாரிக்க ஆந்திர பொலிஸார் விரைவில் இலங்கை வரவுள்ளனர்!!

364

Kidneyஆந்திர பிரதேச பொலிஸ் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. இலங்கை மற்றும் இந்திய நபர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறுநீரக விற்பனை மோசடி தொடர்பில் குறித்த பொலிஸ் குழு விசாரணை நடத்தவுள்ளது.

சிறுநீரக மோசடி தொடர்பில் விசாரணை முன்னெடுக்க வரும் ஆந்திர பிரதேச பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள முக்கிய தனியார் வைத்தியசாலைகளில் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு சிறுநீரக மோசடி இடம்பெறுவதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டது.

எனினும் சிறுநீரக மோசடி தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என இலங்கை சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் லலித் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுநீரக சிகிச்சை மேற்கொண்டும் அந்த முக்கிய வைத்தியர் யார் என்பது இன்னும் வெளிவரவில்லை. எனினும் அவர் கொழும்பில் உள்ள அரசாங்க வைத்தியசாலை ஒன்றில் கடமை புரிபவராக இருக்க வேண்டும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள முக்கிய தனியார் வைத்தியசாலைகளில் கடந்த ஒரு வருடத்தில் இடம்பெற்ற சிறுநீரக சிகிச்சை தொடர்பான அறிக்கை ஒன்றை சுகாதார பிரிவு கோரியுள்ளது.

இந்தியாவில் உள்ள இளைஞர்கள் இலங்கைக்கு இலவசமாக அழைத்து வரப்பட்டு அவர்களது சிறுநீரகம் பணத்திற்காக சிகிச்சை மூலம் பெறப்பட்டுள்ளதென தெரியவந்துள்ளது.

இவ்வாறு சிறுநீரக சிகிச்சைக்கு இலங்கை வந்த தினேஸ் மாரு என்ற இளைஞன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்தே சிறுநீரக மோசடி தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளது.