தலைநகரை அதிர வைக்க அணி திரளுங்கள் : மனோ கணேசன் அழைப்பு!!

366

Mano Ganesan

எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ள மேதின ஊர்வலத்திலும், கூட்டத்திலும் அணிதிரண்டு, தமிழின ஜனநாயக அரசியல் பலத்தை எடுத்துக் காட்டுமாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற ஏற்பாடாகியுள்ள கட்சியின் மேதின நிகழ்வுகள் தொடர்பாக விடுத்துள்ள அழைப்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

நடந்து முடிந்த மேல்மாகாணசபை தேர்தலில் எம் சொந்த சின்னத்தில் நாம் தனித்துவமாக பெற்றுக்கொண்ட 51,000 வாக்கு சாதனைக்கு அணி சேர்க்கும் முகமாக, தலைநகர் தமிழர்களின் ஏக தலைமை பிரதிநிதிகளான உங்கள ஜனநாயக மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலத்திலும், கூட்டத்திலும் அணிதிரண்டு வந்து கலந்து கொண்டு, தலைநகரில் எங்கள் தமிழின ஜனநாயக அரசியல் பலத்தை எடுத்து காட்டுங்கள்.

அரசியல் அதிகாரத்தை பகிந்து நாட்டை ஐக்கியப்படுத்துவது, மலையக மக்களின் காணி-வீட்டுரிமை, கொழும்பிலே வீட்டுடைப்பை எதிர்ப்பது, உழைக்கும் மக்களின் உழைப்புக்கேற்ற ஊதியம், இன – மதவாதங்களை எதிர்ப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாம் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பி தலைநகரை அதிர வைப்போம்.

மே முதலாம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் மே தின நிகழ்வுகள் பிற்பகல் 12.30 மணிக்கு ஜிந்துப்பிட்டி வீதி முருகன் ஆலயத்துக்கு எதிரிலிருந்து ஊர்வலத்துடன் ஆரம்பமாகும்.

ஜிந்துப்பிட்டி வீதியிலிருந்து ஆம்பமாகும் ஊர்வலம் கண்ணார தெரு, ஆண்டிவால் தெரு, கதிரேசன் தெரு, வரகா சந்தி, அந்தோனியார் வீதி, ஜம்பட்டா வீதி, சங்கமித்தை வீதி, புது செட்டி தெரு, விவேகானந்தா வீதி, சென்ட்ரல் வீதி, ஆட்டுப்பட்டி தெரு வழியாக சென்று மீண்டும் ஜிந்துப்பிட்டி வீதி முருகன் ஆலய எதிரில் அமைந்துள்ள மைதானத்தை அடையும். இம்மைதானத்தில் மாலை 4 மணிக்கு மேதின எழுச்சி கூட்டம் நடைபெறும்.

நமது கட்சியின் மற்றும் நமது ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் கண்டி, நுவரெலியா மாவட்ட கிளைகளை உள்ளடக்கிய மலையக செயலணி, கம்பஹா மாவட்ட செயலணி, கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை, கொலொன்னாவை, தெஹிவளை, கொழும்பு மாநகர செயலணிகள் மற்றும் கட்சியின் ஜனநாயக இளைஞர் இணையம், மகளிர் இணையம் ஆகியவற்றுடன்,

ஜனநாயக இளம் வர்த்தகர் இணையம், ஜனநாயக கலைஞர் இணையம் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டு நமது பலத்தை எடுத்துக்காட்ட உள்ளன. அத்துடன் நமது அழைப்பை ஏற்று பல்வேறு சகோதர அரசியல், சமூக அமைப்புகளும் நமது மேதின விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளன.

சிறப்புமிக்க இந்த நமது மேதின ஊர்வலத்திலும், கூட்டத்திலும் அணிதிரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு கட்சி தோழர்களையும், ஆதரவாளர்களையும் அன்புடன் அழைக்கின்றேன்.