
ஐ.பி.எல் போட்டிகளில் தொடர் தோல்விகளை தழுவி வருவது தனக்கு வருத்தமளிப்பதாக பெங்களூர் ரொயல் சலஞ்சர்ஸ் அணித்தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.
நேற்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் பெங்களூர் ரொயல் சலஞ்சர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் தலைசிறந்த வீரர்களை கொண்ட பெங்களூர் ரொயல் சலஞ்சர்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப்பிடமும் வீழ்ந்தது.
முதலில் விளையாடிய பெங்களூர் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. யுவராஜ்சிங் அதிகபட்சமாக 35 ஓட்டங்கள் எடுத்தார்.
அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 7 பந்தில் 20 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூர் அணி ஹட்ரிக் தோல்வியை தழுவியது.
இந்த தோல்வி குறித்து ரொயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அணித்தலைவர் வீராட் கோஹ்லி கூறுகையில், 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை தொடர் தோல்வி ஏற்பட்டால் அதில் இருந்து மீண்டு வருவது கடினம்.
2 போட்டியில் தோற்ற நாங்கள் அதில் இருந்து மீண்டு வெற்றி பெற முயற்சித்தோம். அதுவும் இயலாமல் போனது. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இருப்பினும் இன்னும் நேர்த்தியுடன் பந்து வீச வேண்டும் என்று கூறியுள்ளார்.
பஞ்சாப் அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது.
வீராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி 5 ஆட்டத்தில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது.





