இந்தியாவின் அல்போன்சோ மாம்பழம் மற்றும் 4 வகை காய்கறிகளை வரும் மே மாதம் 1ஆம் திகதி முதல் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பு தாற்காலிகத் தடை விதித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட அல்போன்சோ மாம்பழங்கள் மற்றும் காய்கறிகள், பூச்சிகளாலும், புழுக்களாலும் அரித்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இங்கிலாந்து நாட்டில் உள்ள உருளைக் கிழங்கு, வெள்ளரிக்காய் தாவரங்கள் பாதிக்கப்படும் என ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தாவர சுகாதாரத்துக்கான நிலைக்குழு கருதியது.
இதனையடுத்து இந்தியாவில் இருந்து அல்போன்சோ மாம்பழங்கள் மற்றும் கத்தரிக்காய், பாகற்காய், புடலங்காய், சேப்பங்கிழங்கு ஆகிய 4 வகை காய்கறிகளை வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் இறக்குமதி செய்வதற்கு தாற்காலிகத் தடை விதிக்கும்படி அந்த அமைப்பு பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரையை ஏற்று இந்தியாவின் அல்போன்சோ மாம்பழம் மற்றும் 4 வகை காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்பு இந்தத் தடை மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.