ஆம்புலன்ஸ் தரமறுத்த மருத்துவமனை… இறந்த 2 வயது தம்பியின் சடலத்தை கையில் தூக்கிச் சென்ற 10 வயது சிறுவன்!!

357

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேசத்தில் இறந்த 2 வயது தம்பியின் சடலத்தைக் கையில் எடுத்துச் செல்லும் 10 வயது சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது 2 வயது குழந்தை கார் மோதி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது. இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, பிரவீன் குமாரின் 2 வயது குழந்தை வளர்ப்புத் தாய் சீதாவுடன் டெல்லி – சஹ்ரான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தூக்கிக் கொண்டிருந்துள்ளான். அப்போது குழந்தை தொடர்ந்து அழுதுள்ளது. இதனால் சீதா குழந்தையைத் தள்ளி விட்டுள்ளார்.

அந்தநேரம் பார்த்து அந்த வழியாக வந்த கார் ஒன்று குழந்தை மீது ஏறியுள்ளது. இந்த விபத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சீதாவைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் உடல் பாக்பத் மாவட்ட அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் மகனின் உடலை வாங்குவதற்காக பிரவீன் குமாரும், 10 வயதாகும் மூத்த மகன் சாகர் குமாரும் வந்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அப்போது பிரவீன் குமார்,”எங்களது கிராமத்திற்கு 50 கிலோ மீட்டர் செல்ல வேண்டியுள்ளது. ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளனர்.

இதனால் வேறு வழியில்லாமல் தந்தையும், 10 வயது மகனும் 2 வயது குழந்தையின் உடலை ஒருவர் மாற்றி ஒருவர் கைகளிலேயே தூக்கிச் சென்றுள்ளனர். இதைச் சாலையில் சென்றவர்கள் பார்த்து தங்களின் செல்போன்களில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக இதேபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த மாநிலத்தில் சுகாதாரத்துறை எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதை இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து உணர்த்தி, எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.