பல்கலைக்கழக மாணவனின் விபரீத முடிவு : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

604

பல்கலைக்கழக மாணவன்..

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனைப் பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட குறித்த மாணவனின் சடலம் 5 நாட்களின் பின்னர் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் கடந்த 26ஆம் திகதி மாலை 3 மணியளவில் பாலத்தில் இருந்து குதித்துள்ளார். சம்பவம் நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு சடலம் கண்டெடுக்கப்பட்டமையால் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலத்திற்கு அருகில் பையை வைத்துவிட்டு பாலத்தில் இருந்து கீழே குதித்த மாணவனைப் பார்த்த நபர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும், கடற்படையினரும் ஐந்து நாட்களாக ஈடுபட்டனர். நுவன் லக்ஷித தேவசுரேந்திர என்ற 24 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

இவர் எஹலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மாணவன் கொழும்பு றோயல் கல்லூரியில் உயர்தரத்தில் அதி கூடிய Z புள்ளிகளை பெற்று சித்தியடைந்ததன் பின்னர் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ளதாக பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொறியியல் பீட மூன்றாம் வருடப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு வீடடிற்கு சென்ற மாணவன் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு திரும்பும் போது மகாவலி ஆற்றில் குதித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூன்று நண்பர்களுக்கு மூன்று உணவு பார்சல்களுடன் மகன் வீட்டை விட்டு வெளியேறியதாக மாணவனின் தாய் தெரிவித்துள்ளார். மாணவனின் மடிக்கணினி, பல்கலைக்கழக அடையாள அட்டை மற்றும் வீட்டில் இருந்து கொண்டு வந்ததாக கூறப்படும் மூன்று உணவுப் பார்சல்கள் பாலத்திற்கு அருகில் இருந்த பையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாணவன் மன அழுத்தத்திற்காக மாத்திரைகள் பெற்றுக் கொண்டார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.