இலங்கையில் கறுப்புச் சந்தையில் 25000 ரூபாய் வரை உயர்ந்த கோதுமை மாவின் விலை!!

538

கோதுமை மா..

இலங்கையில் ஒரு மாதத்திற்குள் கோதுமை மா பிரச்னையை அரசாங்கம் தீர்க்காவிட்டால் நாட்டில் பாண் உட்பட பேக்கரி உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் வரிசையில் நின்றாலும் பாண் ஒன்றை வாங்க முடியாத நிலை ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் செரண்டிப் மற்றும் பிரீமா நிறுவனங்கள் டொலர் பற்றாக்குறையால் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்த டுபாய் மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்கள் 700 மில்லியன் டொலர்களுக்கு மேல் கடனாக உள்ளதால், டொலரில் கைப்பணம் செலுத்தி மாவை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், அந்த நாட்டின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் 50kg கோதுமை மா 8000 – 9000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கறுப்புச் சந்தையில் 25000 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அந்த விலையில் உற்பத்தி செய்தால் பாண் ஒன்றின் விலை 350 ரூபாவைத் தாண்டும். தின்பண்டங்கள் விலை 150 ரூபாவைத் தாண்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.